தஞ்சாவூர்: தஞ்சை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 2 வழக்குகளில் அதிரடி தீர்ப்பு கூறப்பட்டு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



தஞ்சை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வாழ்க்கை புது காலனியை சேர்ந்த சிவசாமி என்பவரின் மகன் கணபதி (28). கட்டிட சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி அதே பகுதியில் ஆற்றுக்கரையில் சென்றார். அப்போது அங்கு குளிப்பதற்காக 15 வயது சிறுமி வந்துள்ளார்.

இதைபார்த்த கணபதி, அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமி கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் அப்போதை  பாபநாசம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தார்.

இந்த வழக்கு தஞ்சையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து கணபதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்குமாறு, அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

இதேபோல் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
 
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திங்களூரைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரின் மகன் கோபிநாத் (25). இவர் கடந்த 2018 ம் ஆண்டு 17 வயது சிறுமியைக் காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கினார். இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், திருமணம் முடிந்து 3 நாள்களுக்கு பின்னர் கோபிநாத் வேலை தேடி வெளியூருக்குச் சென்றார். பின்னர் கோபிநாத் திரும்பி வரவில்லை. இதையடுத்து அந்த சிறுமிக்கு 8 மாதங்களில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. தொடர்ந்து அச்சிறுமியை கோபிநாத் குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கோபிநாத்தை கைது செய்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து கோபிநாத்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.