தஞ்சாவூர்: தஞ்சை அருகே குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி வேண்டி மேலவெளி பொதுமக்கள், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை வகித்து தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன்படி தஞ்சை அருகே மேலவெளி ஊராட்சி மேட்டுதெரு பின்புறம் உள்ள பொதுமக்கள் கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-


நாங்கள் மேலவெளி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகர் மற்றும் விஜயநகர் விரிவாக்கம் மற்றும் ஆத்மநேசர் நகரில் சுமார் 120 குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி, சாலை, தெரு விளக்கு, போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதற்காக பலமுறை கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் எங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வணே்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தஞ்சை வடக்கு வீதி மேளக்கார சந்து பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (73). இவர் தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




நான் தஞ்சை மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் 31 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்கு சேர வேண்டிய பணிக்கொடை உரிமைத் தொகையை எனக்கு நிர்வாகம் வழங்கவில்லை. இதையடுத்து திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி எனக்கு உரிமையுள்ள பணிக்கொடை தொகையை 30 நாட்களுக்குள் 10 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் பண்டக சாலை நிர்வாகம் இதுவரை எனக்கு பணிக்கொடை தொகை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். எனவே நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு பணிக்கொடை தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதேபோல் தஞ்சையை அடுத்த கரந்தையை சேர்ந்த சத்துணவு சமையலர் புவனேஸ்வரி, கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-


நான் கடந்த 1996-ம் ஆண்டு திருவையாறு ஒன்றியத்தில் சத்துணவு சமையராக பணியில் சேர்ந்தேன். எனது கணவர் இறந்து விட்டார். எனது மகள் தஞ்சையில் படிப்பதால் நான் தஞ்சைக்கு வேலையை மாற்றி தருமாறு கேட்டு எனக்கு பணி மாற்றி கொடுக்கப்பட்டது. அதன்படி 5 மாதங்கள் தஞ்சையில் பணியாற்றினேன். பின்னர் என்னை மீண்டும் திருவையாறு ஒன்றியத்துக்கு மாற்றி விட்டதாகவும் அங்கு செல்லுங்கள் என தெரிவித்தனர். ஆனால் தற்போது அங்கு எனக்கு பணி தர மறுக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.