தஞ்சாவூர்: அனுமதியின்றி செயல்படும் தண்ணீர் ஆலையை மூட வேண்டும் என தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டு பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர் 47வது வார்டு பகுதி மக்கள் சார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மூன்றாவது வாயில் முன்பு அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தண்ணீர் ஆலையை இழுத்து மூட மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர செயலாளர் எஸ்.அபுசாலிக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் துவக்கி வைத்து உரையாற்றினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி 47 வது வார்டு பகுதியில் முல்லை நகர், விசாலாட்சி நகர்,குமார் போஸ்டல் காலனி, ரத்னா நகர், பாரதிநகர், உப்பரிகை உள்ளிட்ட நகர்கள் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நிலத்தடி நீரை நம்பியும், மாநகராட்சி வழங்குகின்ற குடிநீரை பயன்படுத்தியும் தங்கள் வாழ்க்கை தேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள முல்லை தெருவில் பியூரி பையிங் என்ற தனியார் கம்பெனி ஆழ்துளை போர்வெல் அமைத்து தண்ணீரை தினந்தோறும் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து குடிநீர் விற்பனை செய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து தெருவிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து,அவரவர்கள் வீடுகளில் உள்ள போர் தண்ணீர் எடுக்க முடியவில்லை. மாநகராட்சி வழங்குகின்ற குடிநீரும் இப்பகுதி மக்களின் தேவையை போக்கவில்லை.
எனவே சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி செயல்படுகின்ற தனியார் தண்ணீர் ஆலையை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக தண்ணீர் கம்பெனி ஆலையை இழுத்து மூட வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்சிவக்குமார், செல்வசுப்பிரமணி, மகேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ராமநாதபுரம் ஊராட்சி நிர்வாகி அபிப்ரஹ்மான், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் லட்சுமணன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சாமிநாதன், மாரிமுத்து , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் சுப்பராயன், வன துர்கா நகர் திமுக பிரதிநிதி மகேந்திரன், 47 வது வார்டு கார்த்திகேயன், தமிழ் தேசிய முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் விசிக நிர்வாகி சுரேஷ், 47 வது வார்டு தொமுச பிரதிநிதி ஜோசப், 47 வது வார்டு பகுதி நிர்வாகிகள் சையது முகமது, இப்ராஹிம், ரஜாக்,ஆதாம் முகமது சுந்தர்,கிருஷ்ணராஜ், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சசிகலா, 47வது வார்டு பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் சவுரியம்மாள், ஜெய்சிராணி, சாமியம்மாள் புஷ்பவல்லி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.