அதிகாரிகளே சாலையும் சரியில்லை... சாக்கடை நாற்றமும் தாங்க முடியலை. இதுனால கல்யாணத்துக்கு பொண்ணு கூட கொடுக்க மாட்டாங்க போலிருக்கு என்று வேதனை தெரிவித்து ஒருவர் மனு கொடுக்க ஒரு கிராமமே திரண்டு வந்து சாலைமறியல் செய்ய போலீசார் திகைத்துதான் போய்விட்டனர். இது நடந்தது தஞ்சை – பூதலூர் சாலை களிமேடு அருகில்தான்.

சாலையில் ஓடுது சாக்கடை நீரு... தாங்க முடியலை முடை  நாற்றம், இதை சகிச்சுக்கிட்டு போகலாம்னு பார்த்தா சாலை இருக்கு குண்டு குழியுமாக இருக்கு. இந்த கிராமத்துல 50 இளைஞர்கள் இருக்கோம். இதே நிலை நீடித்தால் மணப்பெண் கிடைப்பது கூட கஷ்டமாக போயிடும் போலிருக்கு என்று வித்தியாசமான கோரிக்கையை மனுவாக கொடுத்து தஞ்சை அருகே கிராமத்தினர் சாலைமறியலில் நடத்த பரபரப்பு பற்றிக் கொண்டது.






தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அருகே உள்ளது பள்ளியேரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதை சீரமைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே, சாலையை சீரமைக்க கோரி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். சொல்லியும் பார்த்தோம். மனுவும் கொடுத்தோம். முடியலை. இதுக்கு மேல பொறுக்க முடியலை என்று செம கடுப்பான கிராம மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் தஞ்சை- பூதலூர் சாலையில் போக்குவரத்தை மறித்து அமர்ந்தனர்.

சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு என அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என கோஷமிட தகவல் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு பறக்க விரைந்து வந்த போலீசார் மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த... இல்லங்க வந்து பாருங்க எங்க கிராமத்தை. அப்ப தெரியும் என்று மக்கள் ஆதங்கப்பட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.





பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் போலீசார் தொடர்பு கொண்டு பேசிய நிலையில், பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனராம். சாலை சீரமைக்கப்படும் என்றும் உறுதியும் கொடுத்துள்ளனர். இதை மறியல் நடத்தியவர்களிடம் கூறி போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் கடந்த பல ஆண்டாக சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களிலும், சாலைகளிலும் சாக்கடை நாற்றம் வீசுகிறது. எங்கள் கிராமத்தில் சுமார் 50 இளைஞர்கள் உள்ளனர். கிராமத்தின் நிலையை பார்த்து விட்டு பெண் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு திருமணம் ஆவது கடினம் என்ற நிலை உள்ளது. எங்கள் கிராமத்திற்கு அதிகாரிகள் வந்து பார்க்க சொல்லுங்க. அப்போ தெரியும் நாங்க எந்த அளவுக்கு பரிதாபமான நிலையில் இருக்கோம்ன்னு. பார்த்த பின்னாடியே நடவடிக்கை எடுக்கட்டும்" என்றனர்.