தஞ்சாவூர்: இல்லைங்க... வியர்க்காது... கவலைப்படாம இருங்கோ என்று தஞ்சை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவது போல் ஒரு செய்தி இருக்குங்க. என்ன தெரியுங்களா?
கோடைகாலம் வந்தாலே மக்களுக்கு மின்தடையை நினைச்சு பயம் வந்திடும். திடீர், திடீர்ன்னு நிறுத்துவாங்க. மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிக்காக காலையில ஆரம்பிச்சு மாலை 5 மணி வரைக்கும் பவர் கட் ஆகும். மற்ற மாசத்துல பவர் கட்டை எப்படியாவது சமாளிச்சிடலாம். ஆனால் கோடை வந்தாலே மக்களுக்கு வியர்க்குதே... எரியுதே என்ற வேதனைதான். புழுக்கம் தாங்காமல் தவிப்பது ஒரு பக்கம் என்றால் வேர்க்குரு வந்தால் முடிந்தது. இப்படி மத்தளத்திற்கு 2 பக்கம் இடி என்பது போல் பவர் கட் ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அத்திந்தோம்..... திந்தியும் தோந்தன..... திந்தாதி நொம்தோம்....நொந்து போனோம் என்று வேதனையில் வாடும்.
தஞ்சை மாநகரத்தில் மாதத்திற்கு ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு நாள் என்ற ரீதியில் அந்தந்த பகுதி துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் இடங்களில் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும். அப்படி கணக்கீடு செய்தால் மாதத்தில் தஞ்சை மாநகரின் அனைத்து பகுதிகளில் மாதாமாதம் 5 நாட்கள் மின்தடை ஏற்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும். அப்படிப்பட்ட மின்தடை நாட்களில் மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. தவியாய் தவித்துதான் போய் விடுவார்கள். கண்கள் கடிகாரத்தை விட்டு நகராது. எப்போது 5 மணியாகும்... எப்போது மின்சாரம் வரும் என்பதுதான். என்னதான் இன்வெர்ட்டர் இருந்தாலும் பேக்கப் தாங்குமா? ஒத்த மின்விசிறியாவது தொடர்ந்து சுத்துமா என்று கலங்கி போய் விடுவார்கள் மக்கள்.
எல்லாம் சரி... இதெல்லாம் மாதாமாதம் நடக்கிறதுதானே. என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? விஷயம் இருக்குங்க. இப்போ ஆண்டு இறுதி தேர்வு வந்து விட்டது. அதிலும் 10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வு. படிக்கணும்... படிக்கணும்... தேர்வு எழுதணும் என்று பரபரப்பாக உள்ள காலக்கட்டம். ஏப்ரல் மாதம் வரை பொதுத் தேர்வு நடக்கிறது. இந்த நேரத்தில் மின் தடை இருக்குமா... இருக்காது. இந்த 2 மாதங்களும் அதாவது பொதுத் தேர்வு முடியும் வரை மின்தடை செய்யப்படாது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக தேர்வு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின்தடை செய்வது இருக்காது. மிகவும் அவசரப்பணி என்றாலும் தேர்வு முடிவுற்ற பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மின்தடை செய்யப்பட்டு உடனடியாக பிரச்னைகள் சரி செய்யப்படும். மாணவர்கள் தேர்வை நன்கு எழுதவும், தேர்வுக்காக நன்கு படிக்கவும் இதுபோன்ற ஏற்பாடு என்று தெரிவித்தனர்.
இந்த செய்தி தஞ்சை மாவட்ட மக்களுக்கு “அசோகா” அல்வாவுடன் ஜிகர்தண்டாவும் சேர்த்து சாப்பிட்டது போல் இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு பவர் கட் இருக்காது. வியர்க்காது என்று அப்பாடா என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர். மாணவர்கள் புண்ணியத்தில் எங்களுக்கு மின்தடை இல்லாமல் இருக்கு. வாழ்க மாணவர்களும், பொதுத் தேர்வும் என்று மைண்ட் வாய்ஸில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.