தஞ்சாவூர்: தஞ்சை மக்களுக்கு மனசுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ் தரும் பகுதியாக விளங்கிய சிவகங்கை பூங்கா பூடப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தும் திறக்கப்படாத நிலையே நீடிக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை பூங்கா திறக்கப்படாது ஏன் என்று பொதுமக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
 
1871ல் உருவாக்கப்பட்ட சிவகங்கை பூங்கா


உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வற்றா குளமும் அமைந்துள்ளது. இப்பூங்காவில் பல ஆண்டுகள் பழமையான ஏராளமான மரங்கள் நிறைந்து இயற்கை நிழற் குடையாக சூழ்ந்திருக்கும்.




விலங்குள், பறவைகள் வளர்க்கப்பட்டன


மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், உள்ளிட பல்வேறு வகையான மிருகங்களும், புறா, மயில், கிளிகள் என பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தது. சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர்சறுக்கு விளையாட்டுகளும் இருந்தன. தஞ்சை மாவட்ட மக்களின் பேவரைட் பூங்காவாக இந்த சிவகங்கை பூங்கா திகழ்ந்து வந்தது. மாலை நேரத்தில் குடும்பம் குடும்பமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற பெருமை மிக்கதுதான் சிவகங்கை பூங்கா.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு


இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வசதிகளை அமைப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பராமரிக்க கூடாது என சட்டம் உள்ளதால் பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்டன. பூங்காவில் இருந்த 41 மான்களையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யபப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.


பல்வேறு பணிகளும் நிறைவு


தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா முழுவதும் அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என பூங்காவில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுகள் சாதனங்களும், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஏராளமான பணிகள் நிறைவு பெற்றது.




கோடை விடுமுறை தொடங்கியது


நுழைவாயில் அமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணியும் முடிவடைந்தது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் முக்கிய சுற்றுலா தளமான சிவகங்கை பூங்கா, மணிமண்டபம் ஆகிய இரண்டும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே முழுமையாக பணி முடிந்த சிவகங்கை பூங்காவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிவகங்கை பூங்கா திறப்பு எப்போது?


அவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நுழைவு கட்டணம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும். மாலை நேரங்களில் தஞ்சை மக்கள் நேரத்தை கழிப்பதற்கும் நடைபயிற்சி செய்வதற்கும் சிவகங்கை பூங்காவை பயன்படுத்துவர். ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணி தற்போது முழுமையாக முடிவடைந்தும் திறக்கப்படாமல் இருப்பது தஞ்சை மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.