தஞ்சாவூர்: வரப்போற கோடையில வெயில் எப்படி அடிக்குமோ என்பதை விட இப்போதே பரபரக்குது தேர்தல் களம்... பற்ற வைத்தது போல் தஞ்சை தொகுதியில் மாறி மாறி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை போட ஆரம்பித்து விட்டனர். மாற்றம் வருமா நாம் போடும் ஓட்டு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துமா என்ற எதிர்பார்ப்புதான் மக்கள் மனதில் உள்ளது. ஓட்டு என்ற ஜட்ஜ்மென்ட் என்ன சொல்லும்?


எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்றத்திற்கான தேர்தலின் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தஞ்சை தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவில் யார்யார் போட்டியிடலாம். யாருக்கு வாய்ப்பு இருக்கு? களம் இறக்கப்படும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கத்திரி வெயில் வருவதற்கு முன்பே அரசியல் களத்தை கொதிக்க விட்டுள்ளது.


1952ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் அதிக முறை அதாவது 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக திமுக 8 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்று இருக்கிறது. எத்தனை கட்சிகள் காட்சிகள் காட்டினாலும், அதிமுக, திமுகவே அனைத்து தேர்தலிலும் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக தனது செல்வாக்கை தமிழ்நாட்டில் நிறுவி நிலைநாட்டி வருகிறது. இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலையையும் வந்த பின்னும் அது நிலைக்க வேண்டுமா என்ற நிலையையும் பலமுறை தனது செல்வாக்கால் நிலை நிறுத்தி காட்டியும் நிரூபித்திருக்கிறது.


இரு பெரும் கட்சிகளான அதிமுகவிலும் திமுகவிலும் வேட்பாளர்களின் பெயர் வாங்கினாலே வேட்பாளர்களின் பட்டியலில் தனது பெயர் வந்தாலே பெரும் மதிப்பாகவும் தனக்கு கிடைத்த மாபெரும் மரியாதையாகவும் அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதிக்கு திமுகவின் சார்பில் யார் நிறுத்தப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு பனி, வெப்பம் போல மாறி மாறி மக்களை எகிற செய்து வருகிறது. அதில் நம்ம சர்வே படி இவர்கள் முன்னிலை இருக்காங்க.




எம்.ராமச்சந்திரன் முன்னாள் திமுக எம்எல்ஏ (தலைமை செயற்குழு உறுப்பினர்), எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் (உயர்மட்ட குழு உறுப்பினர்), கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி முன்னாள் எம்எல்ஏ.(தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வடுவூர் பந்தல் சிவா,சண். ராமநாதன் தஞ்சாவூர் மாநகர மேயர், திமுக மாநகரச் செயலாளர் (இளைஞர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர்), துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி. இவர்கள் தவிர இன்னும் சிலர் இருக்காங்களாம்.


எம். ராமச்சந்திரன்: திமுக சார்பில் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதில் 3 முறை வெற்றி, 3 முறை தோல்வி அடைந்துள்ளார். திருவோணம் சட்டமன்ற தொகுதியாக இருந்த போது 1989ம் ஆண்டு 1996 ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறார் அதேபோல ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2016ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 1991ம் ஆண்டு 2001ம் ஆண்டு 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருக்கிறார். அரசியல்வாதி என்பதை தாண்டி அனைத்து தரப்பு மக்களிடமும் நற்பெயரை பெற்றவராக வலம் வருகிறார் தனக்கு அல்லது தனது மகனுக்காவது பாராளுமன்ற வேட்பாளர் சீட்டை பெற வேண்டும் என்று மும்முரம் காட்டுகிறாராம்.


எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்: தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் இவர். பாராளுமன்ற தேர்தலில் 9 முறை போட்டியிட்டதில் 6 முறை வெற்றி பெற்றவர். 1996ம் ஆண்டு 1998ம் ஆண்டு, 1999-2004ம் ஆண்டு 2009ம் ஆண்டு. 2019ம் ஆண்டு என 6 முறை வெற்றியும், 1984, 1989, 1991ம் ஆண்டு என 3 தேர்தல்களில் தோல்வியும் அடைந்தவர். கொரோனா சமயத்தில் மத்திய அரசிடம் இருந்து 5 கோடி ரூபாயை முதலில் நிவாரண நிதியாக பெற்று தந்தவர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர். இருந்த போதும் மக்களுக்கும் இவருக்குமான தொடர்பு அவ்வளவு சுமூகமாக இல்லை. இவரை சந்திக்க வேண்டும் என்றால் அலுவலகம் கூட இல்லை. அவரது வீட்டிற்கு தான் சென்று சந்திக்க வேண்டும். பட்டுக்கோட்டை உள்ளிட்ட தொலைதூரத்தில் இருக்கும் ஊர்களில் இருந்து மக்கள் வந்து சந்திப்பது என்பது கடினமாக உள்ளது. நேரில் சந்திக்கும் மக்களின் குறைகளை அவர் இருக்கும் போது கேட்டறிந்து அதற்கு தீர்வும் ஏற்படுத்துகிறார். இவர் தனக்கோ அல்லது தனது தம்பிக்கோ சீட் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.


கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி: திருவோணம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ. குணத்தில் நல்லவர். அதே சமயத்தில் கோபக்காரர் என்கின்றனர் கட்சியினர். கட்சிக்காரர்களிடம் நல்ல நட்புடன் உள்ளார். பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் ரேசில் இவருக்கு கொஞ்சம் கூடுதலாக வாய்ப்பு இருப்பதாகவே கூறுகிறார்கள்.


பந்தல் சிவா: திமுக தலைமையிடம் மிகவும் நெருக்கமானவர். இவரை நேரம் வரும்போது அரசியலில் பயன்படுத்திக் கொள்வோம் என்று இவரின் மகள் வரவேற்பு விழாவில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை இப்போது இவரது ஆதரவாளர்கள் நினைவுப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் சீட்டு கிடைக்க வாய்ப்பு இருக்குங்க என்கின்றனர்.


சண். ராமநாதன்: தஞ்சை மாநகர மேயர். ஒரு நாள் தவறாமல் ஒவ்வொரு நாளும் மேயர் அலுவலகத்தில் காலை, மாலை என இருவேளையும் கட்சிப் பாகுபாடு இன்றி தனது அலுவலகத்திற்கு வரும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு தீர்வு செய்வது இவருக்கு செம பிளஸ் பாயிண்ட். தன்னிடம் வேலை கேட்டு வருபவர்களின் மனுக்களைப் பெறுகிறார் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாத இறுதி நாளில் அவர்களுக்கான வேலையையும் ஏற்பாடு செய்து தருகிறார். மேயர் அலுவலகத்தில் வருபவர்களை சந்தித்த பிறகு கட்சியினரை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். தஞ்சாவூர் திமுகவில் மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும், கட்சியில் உள்ள இளைஞர்களிடமும் அதிக நெருக்கத்தில் இருக்கிறார். திமுக தலைமையிடமும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் நெருக்கமானவர். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக இளைஞரணிக்கு 5 இடங்களை கேட்டு உதயநிதி பெரும் திட்டத்தில் இருக்கிறாராம். அதற்கான வேட்பாளர் பெயர்களையும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளதாகவும் அதில் சண்.ராமநாதன் பெயர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் தலைமையிடம் சண்.ராமநாதனை அடுத்த சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக்கி அழகு பார்க்க நினைக்கிறது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. தஞ்சை அரசியலில் கிடுகிடுவென்று வளர்ச்சி, மக்களிடம் நல்ல பெயர், அனைத்து வார்டு மக்களிடம் நெருக்கம் காட்டுதல், எளிதாக அணுக முடியும் நபர் என்ற பெயர் என்று பல ப்ளஸ்கள் இவருக்கு உள்ளதால் சட்டமன்றம்தான் சரியாக இருக்கும் என்பதும் தலைமையின் திட்டமாம்.