தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி விரைவு வண்டி நிற்காமல் சென்று மீண்டும் ரிவர்ஸ் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. இது பயணிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாபநாசம் ரயில் நிலையத்தில், (வண்டி எண்:16833) மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி விரைவு பயணிகள் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் தினசரி பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்.
இந்த ரயிலில் அரசு பணிக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் எப்போதும் போல் பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்த மயிலாடுதுறை திருச்சி விரைவு ரயில் நடைமேடையில் நிற்காமல், பாபநாசம் சாலியமங்கலம் சாலையிலான ரயில்வே தடுப்பு கேட்டை தாண்டி சுமார் 100-மீட்டர் தூரம் வரை சென்று நின்றது.
ரயில் நிலையத்தில் ரயில் நிற்காமல் சென்றதைப் பார்த்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மீண்டும் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு ரிவர்ஸ்சில் திரும்ப வந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றது. இச்சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.