தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த மூன்று வாலிபர்கள் இறந்தனர். ஆற்றில் மூழ்கி இழுத்து செல்லப்பட்ட அண்ணன், தம்பியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேத்துப்பட்டு நேரு பூங்கா அருகே ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகன்கள் பிராங்களின் (23), ஆண்டோ (20). ஜான்சன். இவர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் பிராங்களின் நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன் (20), சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன் (20), ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோகர் (19) உட்பட 18 பேர், வேன் ஒன்றில் கடந்த 6ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு திருவிழாவுக்காக வந்தனர்.
விழா முடிந்த பின்னர் இன்று காலை 7 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் அமைந்துள்ள அன்னை மரியா தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக வந்தனர். தொடர்ந்து 9 மணியளவில் தேவாலயம் அருகே சமையல் செய்துள்ளனர்.
அப்போது பிராங்களின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன்,மனோகர் ஆகிய ஐந்துபேர் மட்டும் கோயில் அருகே ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு ஓடுகிறது. இந்நிலையில் குளித்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் 5 பேரும் கரைக்கு வரவில்லை. குளிக்க சென்ற மகன்களும், அவரது நண்பர்களும் இன்னும் காணவில்லையே என்று ஜான்சன் மற்றும் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆற்றின் உள்ள மண் திட்டில் கலைவேந்தன் மற்றும் கிஷோர் இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதை பார்த்து ஜான்சன் மற்றும் உறவினர்கள் அலறி கூச்சலிட்டனர். உடன் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
உடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பிரங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகிய மூவரையும் தேடினர். மேலும், திருவையாறு, தஞ்சாவூர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மதியம் கொள்ளிடம் ஆற்றில் சற்று தூரத்தில் மனோகரை இறந்த நிலையில் மீட்டனர். ஆனால் பிராங்களின், ஆண்டோ ஆகிய இருவரின் நிலை என்ன ஆனது என்று தெரியாத நிலை இரவு வரை நீடித்தது. இரவு ஆன போதும் தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
கோயில் வழிபாட்டிற்காக வந்தவர்கள் யாரும் தேவாலயத்திற்கு கூட செல்லாமல் இறந்தவர்களை நினைத்து கண்ணீர் வடித்தப்படி கரையில் நின்று கதறி அழுதபடி இருந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு, விசாரணை செய்தார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இதே பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பூண்டி மாதா பேராலயம் தேர் திருவிழா நடக்க இருந்த நிலையில் இந்த இதுபோன்ற சம்பவம் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.