தஞ்சாவூர்: தமிழகத்திற்குரிய காவிரி நீர் திறக்காததை கண்டித்து நாளை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டும் மூடப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நடக்கும் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது.


காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) கடையடைப்பு போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் ஆகியவை காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது.


வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு


இந்நிலையில் தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் திலகர், பொருளாளர் சதீஷ்பாலாஜி, நகர பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நகர தலைவர் வாசுதேவன் வரவேற்றார். கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நாகையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டார்.


இதன் எதிரொலியாக, நாளை டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவு தெரிவிப்பதுடன், அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைப்பதுடன், ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முடிவில் நகர செயலாளர் துரைகந்தமுருகன் நன்றி கூறினார்.




காமராஜர் மார்க்கெட் மூடல்


இதேபோல் தஞ்சை அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் காமராஜர் மார்க்கெட் தலைமை காய்கனி வர்த்தக சங்கம் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் நாளை நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காமராஜர் மார்க்கெட் மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் ஆதரவு


தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகளின் கூட்டம் தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில், விவசாயிகளின் உரிமைக்காக நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துபகுதிக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும். இணைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.


முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக கொள்முதல் பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் முழுமையாக பங்கேற்கிறார்கள் என்று மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார். இதனால் நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திலும், மத்திய அரசு அலுவலங்கங்கள் முன்பு நடக்கும் மறியல் போராட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.