ராக்கெட் போல் விலையில் வேகம் பிடிக்குதே... குடும்பத்தலைவிகள் கவலை எதற்காக?

கடந்த மாதம் 1 கிலோ ரூ.50-க்கு விற்ற பல்லாரி நேற்று 1கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆனதால் குடும்பத் தலைவிகள் கவலையடைந்தனர். 

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு திருச்சி ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்களில் இருந்தும், கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த மாதம் வரை சின்னவெங்காயம் 1 கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. இந்த நிலையில் வெங்காயம் விளையும் பகுதிகளில் விளைச்சல் குறைய தொடங்கியதால் வழக்கத்தை விட குறைவாக விற்பனைக்காக சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதனால் அதன்விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. அதன்படி நேற்று 1 கிலோ சின்னவெங்காயம் ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வாங்கி சென்றனர். சாம்பார் முதல் சட்னி வரை ருசியாக அமைய சின்ன வெங்காயம்தான் அதிகளவில் பயன்படுகிறது. சின்ன வெங்காயத்தில் சாம்பார் வைத்தால் அந்த தெருவே மணக்கும் என்பார்கள். மேலும் பல்வேறு மருத்துவக்குணங்களையும் கொண்ட சின்ன வெங்காயம் குடும்பத்தலைவிகளின் விருப்பத் தேர்வாக இருந்து வருகிறது. 

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும்  காரணம் ஆகும். வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை  மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன்  கிடைக்கும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 
புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். இப்படி சமையல் முதல் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு குடும்பத் தலைவிகளை கவலையடைய செய்துள்ளது. 

கடந்த மாதம் 1 கிலோ ரூ.50-க்கு விற்ற பல்லாரி நேற்று 1கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கும்பகோணத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுப்படும் சின்னவெங்காயம் மற்றும் பல்லாரி அளவு குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. பல்லாரியை பொறுத்தவரையில் ரூ.10 தான் உயர்ந்துள்ளது. விலை அதிகம் என கூறி பொதுமக்கள் பல்லாரி வாங்கமாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola