தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பவர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதால் வாகனங்கள் பழுதடைந்தன என்று கூறி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் அடுத்த திருவலஞ்சுழி சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வாகன ஓட்டுனர்கள் சிலர் தங்களது வாகனங்களுக்கு பவர் பெட்ரோல் நிரப்பினர். பவர் பெட்ரோல் நிரப்பிய சிறிது நேரத்தில் வாகனங்கள் இயங்காமல் சாலையிலேயே நின்றுள்ளது.


இதனால் குழப்பமடைந்த வாகன ஓட்டுனர்கள் எதனால் பழுது ஏற்பட்டது என்று தெரியாமல் வாகன ஓட்டுனர்கள் தவித்து நின்றனர். தொடர்ந்து பவர் பெட்ரோல் போட்ட பின்னர்தான் வாகனங்கள் நின்றது என்பதை கண்டுபிடித்த வாகன ஓட்டுனர்கள் அங்கு விரைந்தனர். இதற்குள்ள சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கில் பவர் பெட்ரோல் நிரப்பிய அனைத்து வாகனங்களும் ஒவ்வொன்றாக வழியிலேயே பழுதாகி நின்றதால் சந்தேகமடைந்த மற்ற வாகன ஓட்டுனர்களும் வாகனத்தில் நிரப்பப்பட்ட பவர் பெட்ரோலை வெளியே எடுத்து சோதனை செய்து பார்த்துள்ளனர். 


அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து நிரப்பப்பட்டிருந்தது வாகன ஓட்டுனர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களுடன் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கில் ஒன்றாக திரண்டனர். மேலும் அந்த பங்கில் விற்பனை செய்யப்பட்ட பவர் பெட்ரோலை பாட்டில்களில் வாங்கிய வாகன ஓட்டுனர்கள் அதில் சரி பாதியாக பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் இருந்ததால் மேலும் அதிர்ச்சியடைந்தனர். 


இதுகுறித்து பெட்ரோல் நிரப்பும் பங்க் ஊழியர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு எதுவும் தெரியாது என அவர்கள் கூறியதால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு சத்தம் போட தொடங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. தொடர்ந்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் உடனடியாக பெட்ரோல் விற்பனையை நிறுத்தினர். பின்னர் பவர் பெட்ரோல் வைக்கப்பட்டு இருந்த டேங்கர்களை ஆய்வு செய்தனர். இதில் வெளியூரில் இருந்து டேங்கர் லாரியில் பெட்ரோலை எடுத்து வந்து நிரப்பும்போது அதில் தண்ணீர் கலந்து வந்திருப்பதும், இது தெரியாமல் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.


பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டேங்கரில் கொண்டுவரப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் எப்படி கலந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தண்ணீர் கலந்த பெட்ரோலை நிரம்பியதால் வாகனங்கள் பழுதாகி உள்ளதாக கூறி வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசாரின் விசாரணைக்கு பின்பு பாதிக்கப்பட்ட அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் பணத்தை திரும்ப செலுத்தியும், சில வாகனங்களுக்கு சாதாரண பெட்ரோலும் வழங்கினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுனர்களின் இருசக்கர வாகனங்களை மெக்கானிக்கை வரச்சொல்லி உடனடியாக பழுது பார்த்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.