தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் அர்ச்சகர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைக் கோயிலான வெள்ளை விநாயகர் கோயிலில் அர்ச்சகராக விஸ்வநாதன் (75) என்பவர் பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில் இந்த கோயிலுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி பாபநாசம் மெலட்டூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். சுவாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக அந்த சிறுமி மட்டும் தனியாக சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற இக்கோயில் அர்ச்சகர் விஸ்வநாதன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் .
இதற்கிடையில் தங்களின் மகள் உண்டியலில் காணிக்கை செலுத்த போய் வெகு நேரம் ஆகியும் வரவில்லையே என்று பெற்றோர் கோயில் பகுதியில் சென்று தேடி பார்த்துள்ளனர். அப்போது எதிரில் சிறுமி அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த சிறுமியிடம் ஏன் அழுகிறாய் என கேட்டபோது நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
உடன் இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் திருக்கோவில் நிர்வாகத்திடமும், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். இதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அர்ச்சகர் விஸ்வநாதனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோயிலுக்குள் சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடுமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் கோயில் நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் உடனே புகார் அளித்தும் தாமதமாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது போன்ற பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் வியாபாரி பலி
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கும்பகோணம் அருகே கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (55) பால் வியாபாரி. இவர் வழக்கம் போல் நேற்று இரவு நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் செய்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது நாச்சியார்கோவில் வண்டி பேட்டை என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மோதியது அசோக்குமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார் .
இதுகுறித்து தகவல் அறிந்த நாச்சியார் கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக நாச்சியார்கோவில் பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.
மேலும் இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.