தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரிய குளத்தினை நிலஅளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்பாக கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் கைபா என்கிற கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஏதுவாக நில அளவை மேற்கொண்டு எல்லை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்பு நபர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கியபடிவம் - | வழங்கிடுமாறு வட்டாட்சியரிடம் கோரப்பட்டுள்ளது. கடந்த 10.07.2023 அன்று நிலஅளவை செய்வதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
நிலஅளவை செய்தபின் ஆக்கிரமிப்பு விவரங்கள் படிவம் வட்டாட்சியரிடமிருந்து கிடைக்கப் பெற்ற பின் படிவம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்படாவிட்டால், இத்துறையின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பேராவூரணி பெரியகுளத்தில் அளவை இன்னும் முழுமையாக முடியவில்லை. 5 மாதங்கள் கடந்தும் பல முயற்சிகள், பல மனுக்கள் கொடுத்தும் அரசு அதிகாரிகள் தனி நபர் விருப்பத்திற்காக பேராவூரணி பெரியகுளத்தில் அளவைக்கு முன்வர வில்லை. இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முன்வர வில்லை. எனவே பேராவூரணி மக்களின் நீர் ஆதாரமான பெரியகுளத்தை முழுவதுமாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பழஞ்சூர், அணைக்காடு பொன்னவராயன் கோட்டை பகுதிகளில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர், அணைக்காடு, பொன்னவராயன் கோட்டை கிராமங்களில் விவசாய குடும்பத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயிகள் பலருக்கு முக்கிய வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் இருந்து வருகிறது.
இப்பகுதியில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு உயர் மின் கோபுரத்திற்காக அரசு விவசாயிகளின் காய்க்கும் தென்னை மரங்களை அகற்றி மின் வழிப் பாதை அமைத்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய 1500 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அகற்றப்பட்டது. இதற்கான நிவாரணத் தொகை 40 நாளில் வழங்குவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் நிவாரணத் தொகையும் குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தென்னை மரங்களுக்கு மதிப்பீடும் செய்யப்படாமல் உள்ளது.
எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரண இழப்பீட்டின் தொகையை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவர் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.