அமைதியான, உற்சாகமான புத்தாண்டு... விடிய, விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசார்

தஞ்சை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை விபத்தில்லாமல் அமைதியாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் கொண்டாடிட மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி 1000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு தீவிர கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

Continues below advertisement

இன்று ஆங்கில புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை நள்ளிரவில் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பொதுமக்கள் வரவேற்றனர். நட்சத்திர விடுதிகள்,ஓட்டல்கள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தது. இருப்பினும் வாலிபர்கள் மதுபோதையில் பைக்குகளில் வேகமாக தாறுமாறாக ஓட்டிவந்து விபத்தில் சிக்கும் சம்பவமும் கடந்த காலங்களில் ஆங்காங்கே நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறும், மக்களை பாதுகாக்கும் வகையில் இந்தாண்டு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். 


அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை விபத்தில்லாமல் அமைதியாகவும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் கொண்டாடிட மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தியேட்டர், ஓட்டல், பூங்கா, பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள், சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முதல்நாள் இரவு முதல் இன்று வரை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஷிப்ட் முறையில் பணியாற்றினர்.

சில போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில்  சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சையில் முக்கிய சாலைகள் மட்டுமில்லாது அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக புறவழிச்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

நள்ளிரவில் வாகன சோதனை தீவிரமாக இருக்கும். ஏனென்றால் சிலர் குடித்து விட்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் வருவர். அப்படி யாராவது வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள், கார் ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் புறவழிச்சாலைகளில் சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த குழுவினர் அனைத்து முக்கிய சாலைகளையும் தீவிரமாக கண்காணித்தனர். ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குவோரின் விவரங்களை முழுமையாக சரியான முறையில் பெற வேண்டும் என்று அந்தந்த உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். சந்தேகப்படும்படி யாராவது அறை புக் செய்ய வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

தெருக்களில் சந்தேக ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி தஞ்சை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தஞ்சை பெரிய கோயில், ரயில் நிலையம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். இன்று மாலை வேளையில் வாலிபர்கள் மது போதையில் எவ்வித பிரச்னையும் செய்யாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola