தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஜெராக்ஸ் மையம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட மைய நூலகத்தில் பயிலும் மாணவர்கள்
மாவட்ட மைய நூலகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டி தேர்வுக்காக பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் குரூப் 1, 4, எஸ்எஸ்சி, பேங்க் எக்ஸாம், மத்திய அரசு பணிக்கான தேர்வுகள், காவல்துறை பணிக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்காக படித்து வருகின்றனர்
போட்டி தேர்வுக்காக தயாராகும் மாணவர்களுக்கு வசதிகள்
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் பயின்ற மாணவர்களில் ஏராளமானோர் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான பாடங்களை எடுத்து படிப்பதற்கு இலவச வைபை வசதி, இலவச ப்ரவுசிங், போட்டி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக இலவசமாக பிரவுசிங் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்வது போன்ற ஏராளமான வசதிகள் மாணவர்களுக்காக அரசு பொது நூலகத்துறை இயக்குனர் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் செய்து தரப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக ஜெராக்ஸ் மிஷன் வழங்கல்
அந்த வகையில் வாசகர் வட்டத்தின் வேண்டுகோளையேற்று புதிதாக ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஜெராக்ஸ் மிஷினை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் குணசேகரன், டாக்டர் அரவிந்தன் ஆகியோர் வாங்கி தந்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் தஞ்சை எம்பி ச.முரசொலி கலந்துகொண்டு பாராட்டி பேசினார். இதில் மாவட்ட மைய நூலகர் முத்து, வாசகர் வட்ட மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் வாசகர் வட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
புரவலர்களாக இணைந்தனர்
தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வு எப்படி எழுதுவது என்ற மாதிரி தேர்வு நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகத்திற்கு நிதி அளித்து தஞ்சாவூரை சேர்ந்த டாக்டர் கோ.ஆனந்தி வசந்த், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, ஆசிரியர் பா.சுரேஷ், சின்னப்பன், கார்த்திகேயன், ரெ.கதிர்வேல், பூதலுார் ஆர்.மோகன், ஒரத்தநாடு ஆர்.ராஜேந்திரன், புதூர் சிவக்குமார் ஆகியோர் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.