தஞ்சாவூர்: சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறதுதான். இதை செயல் வடிவில் செய்து காட்டி மக்கள் மத்தியில் ஜோதி அறக்கட்டளை பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ரோட்ல பெருக்கி சுத்தம் செய்யும் போது இந்த ஹோட்டல்ல நாம சாப்பிட முடியுமானு ஏங்கி பார்த்துட்டு போவோம். ஆனால் இன்று அனைவரோடும் சமமாக உட்கார்ந்து இங்கு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு என துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர். எதற்காக தெரியுங்களா?
தஞ்சையில் இயங்கி வருகிறது ஜோதி அறக்கட்டளை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கட்டுவது, தலைக்கவலம் அணிந்து வருபவர்களுக்கு பரிசு வழங்குதல் என்று பல்வேறு வகையிலும் மக்களின் நண்பனாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது ஜோதிஅறக்கட்டளை.
இந்நிலையில் தஞ்சையில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து நாம் அனைவரும் சமம்தான் என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போல் செய்து காட்டியுள்ளது ஜோதி அறக்கட்டளை .
குப்பைகளுக்கு குட்பை சொல்லுபவர்கள் துப்புரவு பணியாளர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் நகரமே நாறிப் போய்விடும். தினமும் தஞ்சை மாநகராட்சியில் சேரும் 120 டன் குப்பைகள் ஒரு நாள் தேங்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அப்போது தெரியும் துப்புரவு பணியாளர்களின் மகத்துவமான பணி.
நாம் அனைவரும் தீபாவளிக்கு பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தோம். ஆனால் அந்த குப்பைகள் மலை போல் ஒவ்வொரு வார்டிலும் குவிந்தது. தஞ்சை மாநகராட்சியில் தீபாவளி அன்று சேர்ந்த 250 டன் பட்டாசு குப்பைகளை அகற்றி நகரை சுத்தப் படுத்திய தஞ்சை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவப்படுத்தியும், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் ஜோதி அறக்கட்டளை ஆண், பெண் துப்புரவு பணியாளர்களை வேன் மூலம் தஞ்சையில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு (கண்ணப்பா) அழைத்து சென்றது.
சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை மகிழ்விப்பது என்ற மொழிக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மட்டன் கோலா உருண்டை, ஃபிஷ் ஃபிங்கர், முட்டை, சிக்கன் பிரியாணி ஐஸ்கிரீம் என தடபுடலாக அவர்களுக்கு விருந்து பரிமாறி மகிழ்ச்சியில் திணற வைத்தனர்.
வயிறு மட்டுமின்றி மனசும் நிறைந்து அந்த துப்புரவு பணியாளர்கள் ஜோதி அறக்கட்டளையினரை பாராட்டினர். இதுகுறித்து தூய்மைப்பணியாளர் கௌசல்யா என்பவர் கூறுகையில், ரோட்டில் பெருக்கி சுத்தம் செய்யும் பொழுது இந்த கடையை பார்த்து இங்கு வந்து சாப்பிட முடியுமா என ஏக்கத்துடன் பல நாள் சென்றிருக்கிறோம்.
அந்த ஹோட்டலுக்கே எங்களை அழைத்து வந்து சாப்பிட வைத்து எங்களோடு சமமாக அனைவரும் உணவு சாப்பிட்டது மறக்க முடியாது என உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இதேபோல் மற்ற தூய்மைப்பணியாளர்கள் கூறுகையில், அனைவரும் சமம் என்பதை இதுபோன்ற செயல்கள் வாயிலாக ஜோதி அறக்கட்டளை செய்து காட்டி விட்டது. எங்கள் அனைவருக்கும் வயிறு நிறைந்தது என்பதை விட மனம் நிறைந்தது என்றுதான் கூற வேண்டும் என்றனர்.