தஞ்சை - நாகை சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை பாதிப்பு

தஞ்சை-நாகை சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சை-நாகை சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை-நாகை செல்லும் சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

Continues below advertisement

குவிந்து கிடக்கும் குப்பைகளில் தீ வைக்கும் மர்மநபர்கள்

ஒரு சில பகுதிகளில் இறைச்சி கழிவுகளையும் சிலர் கொட்டியுள்ளனர். இதன்காரணமாக ராஜீவ் நகர், ஞானம் நகர் சோழன் நகர் போன்ற இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளில் தீ வைத்து செல்லும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்படுவதால் சாலை முழுவதையும் புகை சூழ்ந்து கொள்கிறது. வாகன ஓட்டுனர்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், குப்பைகள் கொளுத்தப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. 


அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் வயதானவர்கள், குழந்தைகளுககு சுவாச நோய்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகத்தடைகளில் வெள்ளைக்கோடுகள் வரைய வலியுறுத்தல்

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடுகள் வரைந்து ரிப்ளெக்டர்கள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில், கண்டியூர் பிரிவு சாலை பகுதியில் மருத்துவமனை மற்றும் பள்ளிகள் உள்ள இடங்களில் சிறிய அளவிலான தொடர் வேகதடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வேகத்தடைகளில் வரையப்பட்ட வெள்ளை கோடுகள் அழிந்து போய்விட்டது.

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் 

இதனால் தொலைவிலிருந்து பார்க்கும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வேகதடைகள் இருப்பதே தெரியாமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த வேகதடைகள் இருக்கும் பகுதியில் கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர்.

எனவே தொலைவில் இருந்து பார்த்தால் தெரியும் வகையில் இந்த பகுதியில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடுகள் வரைய வேண்டும். மேலும் இரவு நேரத்தில் ஒளிரும் ரிப்ளெக்டர்கள் அமைக்க வேண்டும். இந்த பகுதியின் இரு புறமும் எச்சரிக்கை பலகைகளும் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள் இல்லாமல் உள்ளன. இவற்றிலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெள்ளைக்கோடுகள் வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola