தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்லையா தலைமை வகித்து பேசினார். மாநில பொருளாளர் ஜெயராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள் பொன் சந்திரன், ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் கோகுலதாஸ், மாநில துணை செயலாளர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் தேர்வு
கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர கிளைச் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில சங்கம் தெரிவிக்கும் கட்சிக்கு வாக்களிப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட தலைவராக ராஜ்குமார், துணைத் தலைவர்களாக நாடிமுத்து, நடராஜன், துரைக்கண்ணு, செல்வராஜ், ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட செயலாளராக சேகர், துணை செயலாளர்களாக டி.சேகர், பாபு, ஜெகநாதன், பஞ்சாபிகேசன், மாவட்ட பொருளாளராக செல்வம் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநகர நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு
இதேபோல் மாநகர தலைவராக சுந்தர்ராஜ், துணைத் தலைவர்களாக பாலு, வேல்முருகன், முருகேசன், அய்யப்பன் ஆகியோரும், மாநகர செயலாளராக செந்தில்வேல், துணை செயலாளர்களாக ரவி, நாகராஜன், பரமசிவம், சசிக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பொருளாளராக பிரகாஷ், இளைஞரணி தலைவராக ராமச்சந்திரன், துணைத்தலைவராக பசுபதி, செயலாளராக பிரபு என்கிற ராஜேந்திரன், துணைச்செயலாளராக சுதாகரன், பொருளாளராக சரவணக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டோபிகானா அமைக்க வேண்டும்
தொடர்ந்து மாவட்ட தலைவர் ராஜ்குமார் கூறுகையில், மாநில சங்கம் தெரிவிக்கும் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சலவைத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சையில் சலவைத்துறை (டோபிகானா) கட்ட வேண்டும். அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் டோபிகானா இருக்கிறது. ஆனால் தஞ்சையில் இல்லாததால் சலவைத் தொழிலாளர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த டோபிகானா என்கிற சலவைத்துறையை அமைத்து கொடுத்தால் மிகவும் சுகாதாரமான நிலையில் துணிகள் சலவை செய்து தரப்படும். எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் துரைக்கண்ணு நன்றி கூறினார்.