தஞ்சாவூா்: காதல் விவகாரத்தில் வாலிபரை கண்டித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை கண்டித்தவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் விளார் ரோடு பர்மா காலனியில் வசித்து வரும் சந்தோஷ் (27) என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இது அந்த பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்கள் செல்வநாதன் என்பவரிடம் சந்தோஷை கண்டித்து வைக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி செல்வநாதன் சந்தோஷை கண்டிக்கும் போது, இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25.7.2021 அன்று சந்தோஷ் தனது நண்பரான அமரேஷ் (27) என்பவருடன் சேர்ந்து  பைக்கில் செல்வநாதனை அழைத்து சென்றுள்ளார். பின்னர் விளார் பைபாஸ் ரோட்டில் ஆள் இல்லாத பகுதியில் வைத்து செல்வநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். 

இதுகுறித்து செல்வநாதனின் அக்கா மைனாவதி தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செல்வநாதனை கொலை செய்ததாக சந்தோஷ், அமரேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நிதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி விசாரித்து, சந்தோஷ் மற்றும் அமரேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்..

வங்கி முன்பு இறந்து கிடந்த வாலிபர்

தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் உள்ள வங்கி முன்பு இறந்து கிடந்த கிராம உதவியாளர் உடலை தாலுகா போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று விளார் சாலையில் உள்ள ஒரு வங்கி முன்பு சுரேஷ் இறந்து கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிராம உதவியாளராக பணியாற்றும் சுரேஷ் குடும்ப பிரச்சினையால் மதுபழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வங்கி முன்பு மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.