தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகாவில் உள்ள மழவராயன் ஏரி தூர்வாரும் பணியை தடுப்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.


தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பூதலூர் தாலுக்கா பாளையப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


மழவராயன் ஏரியை தூர்வாருவது குறித்த தீர்மானம்


நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா பாளையப்பட்டி தெற்கு பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள குமரன் மழவராயன் ஏரியை தூர்வாருவது குறித்து ஊராட்சித் தலைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கிராம மக்கள் முன்னிலை ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.


தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பூசாரி தெரு, சோழகம்பட்டி கிராமம் ஆச்சம்பட்டி, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மகன் சாமிநாதனிடம் தூர் வாரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்போது பிரவீன் குமார் மூலமாக ஏரியை ஆழப்படுத்துவதற்கு தங்களிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் தங்கள் உத்தரவின் பெயரில் வருவாய்த் துறை அனுமதியோடும், கனிம மற்றும் சுரங்க துறையினர் அனுமதியோடும் ஏரியை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 


நிலத்தடி நீர் உயர தூர் வாரும் பணி


இந்த ஏரியின் மூலமாக உசிலம்பட்டி, சிதம்பரப்பட்டி , பாளையப்பட்டி வடக்கு, பாளையப்பட்டிதெற்கு, மேட்டுப்பட்டி, கொத்தம்பட்டி, கிள்ளுக்கோட்டை, பில்லுகுலவாய்பட்டி ஆகிய கிராமங்களின் வாழ்வாதாரமே கால்நடைகள் தான். எனவே கால்நடைகள் நீர் அருந்துவதற்கும், நிலத்தடி நீர் உயரவும், மழை நீர் சேகரித்து விவசாயம் செழிக்கவும் ஏரியை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. 


இந்த பணியை தடுப்பதற்காக சில தனிநபர்கள் பேரம் பேசிக்கொண்டு எங்களுக்கு இவ்வளவு தொகை கொடுத்தால் தான் நீங்கள் ஏரியை ஆழப்படுத்தலாம். இல்லாவிடில் நாங்கள் அனைவருக்கும் புகார் அளிப்போம் என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒப்பந்தக்காரர்களை மிரட்டுகின்றனர். இதனால் ஏரியை ஆழப்படுத்தும் பணி தடைப்படும் நிலை உருவாகி உள்ளது. தற்போது ஏரியை நல்ல முறையில் தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தி கொடுத்தால் எங்கள் கிராமத்திற்கு பயன் உள்ளதாக அமையும். இந்த ஏரியை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




சமத்துவபுர வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கணும்


இதேபோல் ஒரத்தநாடு அருகே தோப்பு விடுதி பெரியார் சமத்துவபுரத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டை மீட்டு தரக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். 


அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகாவிற்கு உட்பட்ட தோப்பு விடுதி கிராமத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் பெரியார் சமத்துவபுரத்தில் இலவசமாக 100 வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.


இதில் 80 வீடுகளில் ஒதுக்கப்பட்ட பயனாளிகள் வசித்து வருகின்றனர். மீதமுள்ள 20 வீடுகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்தும் அந்த வீடுகளில் சம்பந்தம் இல்லாதவர்கள் குடியிருந்து வருகின்றனர்.


இதுகுறித்து திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர்  நேரடி ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.