தஞ்சாவூர்: ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள். அது அந்த காலம் இப்போது வாகனத்தையை தள்ளிக் கொண்டு போய்விடும் போல் ஆடிக்காற்று அடித்து விளாசுகிறது. இதனால் மண், தூசிகள் பறந்து கண்களில் விழுவதால் விபத்துக்குள்ளாகி வருகின்றனர் வாகன ஓட்டுனர். அதிலும் சாலையோரத்தில் இருக்கும் விளம்பர பிளக்ஸ்கள் காற்றில் ஆடும் ஆட்டத்தை கண்டு அச்சத்தில் உள்ளனர். இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


ஆளையே தூக்கும் அளவில் ஆடி காற்று


ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோவில்கள் திருவிழாக்கோலமாக இருக்கும். ஆடி மாதத்துக்கென  பல விசேஷங்கள் உண்டு. அதேநேரத்தில் ஆடி  காற்றும் விசேஷமானது தான். ஆடி காற்றில் அம்மியே பறக்கும் என்பார்கள். ஆடி மாதம் தொடங்கி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் முதல் நாளில் இருந்தே காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. தஞ்சை மாநகரில் காற்று வேகமாக வீசியது. இதனால் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்ததால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர்.


தலைகவசம் இல்லாமலும், கண்ணாடி அணியாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி சென்றவர்கள் பலரின் கண்களில் தூசிகள் விழுந்ததால் மிகவும் பாதிப்புக்கு ஆளானார்கள். காற்று அடிக்கும்போது மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டுனர்களை கவனம் சிதற செய்கிறது. அதுமட்டுமின்றி தற்போது காற்று வேகமாக வீசியதால் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்லும்போது அப்படியே இருசக்கர வாகனங்கள் காற்று தள்ளியதால் ஓட்டி சென்றவர்கள் பதற்றம் அடைந்தனர்.


வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்திய வாகன ஓட்டுனர்கள்


சிலர் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டனர். காற்று வீசும்போது மண், தூசியில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முககவசம் அணிந்ததுடன் கண்ணாடி அணிந்தும் பலர் சென்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிக கவனமாக செல்ல வேண்டும் எனவும், கனரக வாகனங்கள், பஸ்களின் அருகே செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.


அச்சுறுத்தும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள்


இந்நிலையில் ஆளையே தூக்கும் வகையில் ஆடிக்காற்றின் வேகம் இருக்கிறது. மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ்கள் விபத்துக்களை எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்துவோம் என்று ஆடிக்காற்றில் படபடவென்று அடித்து கொண்டு பயமுறுத்துகின்றன. தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் பலர் இன்னும் விளம்பர பிளக்ஸ்சுகளை சாலையோரங்களில் வைக்கின்றனர்.


இந்த விளம்பர பிளக்சுகள் காற்றில் விழுந்து பல இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ஆடி மாத காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலையோரங்களில் விளம்பர பிளக்ஸ்கள் வைக்க விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டிப்பாக அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.  ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ்களை உடன் அகற்ற வேண்டும். இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சமின்றி செல்ல உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் சாலையோரங்களில் காய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி சாலையோரங்களில் செல்லும் கேபிள் வயர்கள் சில இடங்களில் மிக தாழ்வாக தொங்கி கொண்டு இருக்கிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கேபிள் வயர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கழுத்தில் சிக்ககிவிடாமல் இருக்கும் வகையில் உயரமாகவும், இறுக்கியும் கட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.