தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள்
நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பட்டீஸ்வரம் கடை வீதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜயமாலா தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.70 ஆயிரத்து 920 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாபநாசம் தாசில்தார் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.
ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட பணம்
பாபநாசம் தாலுகா புளியங்குடி பைபாஸ் சாலை கடை வீதியில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புஷ்பராஜ் ஓட்டி வந்த லாரியை சோதனை செய்த போது லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.67 ஆயிரத்து 900 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை
இதேபோல திருக்கருக்காவூரில் இருந்து திட்டை செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வீரமணி தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த காவலூர் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமாரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ரவிக்குமார் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாபநாசம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன், பாபநாசம் தாசில்தார் மணிகண் டன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
பாபநாசம் பகுதியில் நேற்று 3 இடங்களில் மொத்தம் ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்
இதற்கிடையில் தேர்தலுக்கு பின்னும் பறக்கும்படை சோதனை நீடிக்கும் என்ற அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் தென்னரசு மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
தொடர்ந்து வாகனச் சோதனை
இந்தியாவின் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு கையூட்டு மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது.
மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை நிலை குழு மற்றும் பறக்கும் படை வாகனச் சோதனை நடைபெறும் என்று அறிவித்திருப்பதை வர்த்தகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையர் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.