தஞ்சாவூர்: 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Continues below advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் மேக.இளங்கோவன், வடக்கு மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக வடக்கு மாவட்ட செயலாளர் ராமதாஸ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி, ஊராட்சி மூலம் ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.

Continues below advertisement

1-6-2009 முதல் அரசாணை எண் 234 இன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் பணிமுடித்த வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், பணிக்கொடை ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் சுபாஷ் சந்திர போஸ், மாநில துணை செயலாளர் ராஜீவ் காந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் மகேந்திர வர்மன், முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட பொருளாளர் முருகன், வடக்கு மாவட்ட துணை தலைவர் பிச்சை, மாவட்ட இணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சூரியகலா மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள், அனைத்து கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.