தஞ்சாவூர்: மத்திய அரசு விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காய்ந்த மாலைகளை அணிந்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. ஜெயபால், செயலர் டி. சக்திவேல் உட்பட விவசாயி காய்ந்த மாலைகளை அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


டில்லியில் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதைக் கைவிட வேண்டும். கர்நாடக அரசு அத்துமீறி மேகதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி  காய்ந்த மாலைகளுக்கு இணையாக விவசாயிகளின் நிலைமை இருப்பதாகக் கூறி கழுத்தில் காய்ந்த மாலைகளை அணிந்து கோஷங்கள்  எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதேமாதிரி தஞ்சாவூர் மாவட்டம் கல்விராயன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் மந்திரிகுமார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் கடந்த 2022 ஆம் தேதி நிவாரணம் வழங்கியுள்ளது. நிவாரண தொகையை கனரா வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மகேஸ்வரிக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது ஏடிஎம் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என கூறி ஏடிஎம் கார்டு எண் மற்றும் ஓடிபி(OTP) யை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மகேஸ்வரி தனது அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். தகவல் கொடுத்த அடுத்த 15 நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து முதலில் ரூபாய் இரண்டு லட்சமும், பிறகு ஒரு லட்சமும் என மூன்று லட்ச ரூபாயை வங்கியில் இருந்து எடுத்துள்ளனர். இதனை கூட அறியாத மகேஸ்வரிக்கு மறுநாள் வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு உங்க வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வங்கிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.


இதன் பிறகு வங்கிக்கு சென்ற பிறகு தான் மகேஸ்வரிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே கணவர் உயிரிழப்பால் கிடைத்த நிவாரணத் தொகையை ஏமாற்றிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.