தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் வெற்றிலை விலை ஒரு கவுளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதால் வெற்றிலை பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். வெயில் தாக்கத்தால் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
நோயின்றி காக்கும் தன்மை கொண்ட கற்பக மூலிகை
நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்ட கற்பக மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.
நீர்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த வெற்றிலை
வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட முறிக்கும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.
இப்படி மருத்துவக்குணங்கள் நிறைந்த வெற்றிலை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளான இளங்கார்குடி, நாயக்கர்பேட்டை பகுதிகளில் தொடர்ச்சியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் வெற்றிலையின் தேவை முக்கியமானதாக இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடியை மேற்கொள்கின்றனர்.
வெயில் தாக்கத்தால் உற்பத்தி குறைவு
தற்போது காணப்படும் வறட்சி மற்றும் வெயில் தாக்கம் காரணமாக வெற்றிலை கொடிகள் அதிக துளிர் விடாத காரணத்தால் இலைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் விளைந்த இலைகள் சிறியதாக உள்ளதால் வெற்றிலை சிறிதாக காணப்படுகிறது. இதனால் திடீர் விலையேற்றம் அடைந்து நுாறு வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளி ரூ.100க்கு சில்லறை விலையிலும், 30 கவுளிகள் கொண்ட ஒரு முட்டி ரூ.2500க்கு மொத்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கிடுகிடுவென விலை உயர்வு
கோடை வெயிலின் தாக்கம் தொடரும் பட்சத்தில் ஒரு முட்டி ரூ.3500க்கு உயர வாய்ப்பு இருப்பதாக வெற்றிலை வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். இதன் எதிரொலியாக பிரதான வெற்றிலை, சீவல் வியாபாரம் செய்யும் சில்லறை கடைகளில் வழக்கமாக தாம்பூலம் போடுபவர்கள் வெற்றிலை சீவல் வாங்கும் போது வழக்கமாக அவர்கள் கொடுக்கும் தொகைக்கு வெற்றிலையின் எண்ணிக்கை குறைத்துக் கொடுக்கப்படுவதால் சில்லறை கடை வியாபாரிகளுக்கும் தாம்பூலம் போடுபவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வெற்றிலையின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மழை பொழிந்து வெப்பத்தின் தாக்கம் குறையும் பட்சத்தில் விளைச்சலில் தன்னிறைவு பெற்று விலை குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடும் வெப்பத்தால் வெற்றிலைகள் சிறுத்து போய் உள்ளன. போதிய அளவு தண்ணீர் கிடைக்காத நிலையில் வெற்றிலை கொடிகள் காய்ந்துள்ளன. இதனால் உற்பத்தி குறைந்துள்ளது. விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.