தஞ்சாவூர்: விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினரை கவுரவ குடும்பங்களாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை தியாகிகள் வழித்தோன்றல்கள் கூட்டியக்கம் சார்பில் மகாத்மா காந்தி சிலையிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.
விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தினரை கவுரவ குடும்பங்களாக என அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை தியாகிகள் வழித்தோன்றல்கள் கூட்டியக்கம் சார்பில், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மாகாந்தி சிலைக்கு இன்று விடுதலை தியாகிகள் வழித்தோன்றல்கள் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தலைமையில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மாலை அணிவித்தனர். பின்னர் நூதனமான முறையில் காந்திஜி சிலையிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத்துக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு குண்டடிப்பட்டு ரத்தம் சிந்தி வாழ்க்கையை, உறவுகளை, பொருளாதாரங்களை, தங்கள் உயிர்களை துறந்த விடுதலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பங்களை இந்திய விடுதலைப் பெற்று தந்த போராட்ட கவுரவ குடும்பங்கள் என அங்கீகரித்து இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு வாரியம் அமைத்திட வேண்டும். உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்கள் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அம்மாநிலத்தில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் வழித்தோன்றல்களுக்கு தொடர் கவுரவ நிதி மற்றும் அம்மாநில பேருந்துகள் அனைத்திலும் கட்டணமில்லா பயணம் அனுமதி வழங்கியிருப்பது போல் தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டும்.
போராடி விடுதலை பெற்றுத் தந்த விடுதலை வீரர்களின் வாரிசுகள் வழி தோன்றல்களுக்கு தமிழ்நாடு அரசு சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்க வேண்டும். விடுதலைப் பெற்று தந்த போராட்ட வீரர்கள், வாரிசுகள் வழித்தோன்றல்களுக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கல்வியில் வேலை வாய்ப்புகளில் 2 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
விடுதலைக்காக அர்ப்பணிப்பு செய்து விடுதலை பெற்று தந்த வீரர்களின் வாரிசுகள் வழித்தோன்றல்களை மக்கள் தொகை கணக்கெடுப்பில் தனியாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது போல் அதற்கு இணையான ஊதியம் விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் வழித்தோன்றல்களுக்கு வழங்க வேண்டும்.
குடியிருப்பதற்கு வீடு இல்லாதவர்களுக்கு, மனை பகுதி இல்லாதவர்களுக்கு விடுதலை பெற்று தந்த வீரர்களின் வாரிசுகளுக்கு வழித்தோன்றல்களுக்கு வீட்டு மனைகள், வீடுகள் நகர்ப்புற குடிசை மாற்று வாரிய வீடுகளில் கட்டணமில்லா இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இந்திய விடுதலை பெற்றுத்தந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் வழி தோன்றல்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரதிநிதித்துவ உரிமை சட்ட ரீதியாக அளிக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.