தஞ்சாவூர்: தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் திரையரங்க வளாகங்களில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்டது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி கூட்டத்தில் திமுக – அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சில நிமிடங்கள் வாக்குவாதம் ஏற்பட்டது. 


தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர். மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் மத்தியில் நடந்த விவாதங்கள் வருமாறு: 


மணிகண்டன் (அதிமுக): தஞ்சாவூர் மாநகரில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. குப்பைகள் அள்ளப்படாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஒப்பந்ததாரர் முறையாக செயல்படுவதில்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் திரையரங்க வளாக கடைகளை மீண்டும் ஏலம் விடுவது ஏன்? 


மேயர்: குப்பை பிரச்னை தொடர்பாக ஒப்பந்ததாரரை ஆணையர் அழைத்துப் பேசி, இதுதான் கடைசி வாய்ப்பு என கடும் எச்சரிக்கை செய்துள்ளார்.


ஆணையர்: பணியாளர்கள், வண்டிகள் பிரச்னை உள்ளது. அவற்றிற்கு ஏற்பாடு செய்வதாக ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். இதற்கு ஒரு மாதம் வரை அவகாசம் அளிக்கப்படும். அதன் பின்னரும் இப்பிரச்னை தொடர்ந்தால் ரத்து செய்யப்படும். காந்திஜி வணிக வளாகம், திருவள்ளுவர் திரையரங்க வளாகத்தில் விடப்பட்ட ஏலம் முறையாக நடைபெறவில்லை என்பது தெரிய வந்ததால், நகராட்சி நிர்வாக ஆணையரின் ஆலோசனைப்படி விதி எண் 316-ன் படி ஆய்வு செய்து, விதி எண் 317}ன் படி ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஏலம் விடப்படவுள்ளது.


மணிகண்டன்: ஏலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏலம் எடுத்து முறைகேடு செய்தவர்கள் மறு ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனரே?
 
இது தொடர்பாக மேயரும், திமுக உறுப்பினர்கள் தி. புண்ணியமூர்த்தி, எஸ்.சி. மேத்தா உள்ளிட்டோரும் பதில் அளிக்கும்போது, அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே இடையே சில நிமிடங்கள் வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது.


ஆணையர்: தொடர்புடைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பி. ஜெய்சதீஷ் (பாஜக): வார்டு சபைக் கூட்டத்துக்கு தொடர்புடைய அலுவலர்கள் வராமல், தொடர்பில்லாத அலுவலர்கள் வருவதால், அவர்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை. மனுக்களை மட்டும் வாங்கிச் செல்கின்றனர்.


மேயர்: மனுக்கள் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


காந்திமதி (அதிமுக): ராணி வாய்க்கால் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொய்வாக உள்ளது.
 
ஆணையர்: பர்மா பஜார் கடை வியாபாரிகள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இவர்களுக்குக் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டரிடம் பேசி, அவரது ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


அதிமுக உறுப்பினர் சரவணன் எழுந்து எனது 20வது வார்டில் குடிநீர் வராததால், மக்கள் கடுமையாகத் திட்டுகின்றனர் என்று தெரிவித்து நல்லா இருந்த தஞ்சாவூரை நாசமாக்கிய ஊதா பைப்பு என எழுதப்பட்ட பதாகையை ஏந்தி வந்தார்.


மேயர்: மாநகரில் எங்குமே குடிநீர் பிரச்னை இல்லை. உங்களது வார்டுக்கு வியாழக்கிழமை அலுவலர்களை அனுப்பி, உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி கூட்டத்தில் விவாதங்கள் நடந்தது.