தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அதிக அளவு தில்லை நண்டுகள் சிக்குகிறது. இந்த நண்டுகள் 1 கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதிகளில் தில்லை நண்டுகள் அதிகம் பிடிபடுகின்றன. தில்லை நண்டுகள் சேற்றுப்பகுதியில் உற்பத்தியாகக் கூடியது. அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை ஆகிய கடற்கரைப் பகுதியில் சேற்றுப்பகுதியாக உள்ளதால் இந்தப் பகுதிகளில் தில்லைநண்டுகள் அதிகம் கிடைக்கின்றன.
இந்த வகை நண்டுகள் தில்லை மரங்கள் உள்ள பகுதிகளில் சேற்றில் குழி தோண்டி வாழக்கூடியது. இந்த குழிகள் சுமார் 3 அடி ஆழத்தில் இருக்கும். ஒவ்வொரு பொந்திலும் குறைந்தது 3 நண்டுகளிலிருந்து 5 நண்டுகள் வரை இருக்கும். இந்த பொந்துகளிலேயே நண்டுகள் இனப்பெருக்கம் செய்தும் வருகிறது. இது தில்லை மரவேர்களில் உள்ள பால் போன்ற வெண்மை நிற திரவத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை. தில்லை மரங்களின் வேர்ப்பகுதியில் இந்த வகை நண்டுகள் வாழ்வதால் இதை தில்லை நண்டுகள் என அழைக்கின்றனர்.
இந்த நண்டுகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 100 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த தில்லை நண்டுகளை பிடிக்க தனி மீனவர்கள் உள்ளனர். நண்டுகள் வசிக்கும் குழியில் நண்டுகளை கையை விட்டுதான் பிடிப்பார்கள். இதற்கு நல்ல அனுபவம் வேண்டும். குழியில் நண்டு மட்டுமின்றி பாம்புகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் மற்ற மீனவர்கள் இந்த நண்டுகளை பிடிப்பதில்லை. அனுபவம் உள்ள மீனவர்கள் மட்டுமே குழிக்குள் கையை விட்டு இந்த தில்லை நண்டை பிடிப்பர். இதனால் கவனமுடன் நண்டுகளை பிடிக்க வேண்டும்.
இந்த நண்டு பிடிக்கும் தொழிலை ஒரு சிலர் பாரம்பரிய தொழிலாக செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நண்டுகள் 1 கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தில்லை நண்டுகள் பிடிக்கும் மீனவர்கள் தரப்பில் கூறியதாவது: அதிராம்பட்டினம் கடல்பகுதியை ஒட்டி சதுப்பு நிலப்பகுதியில் தில்லை நண்டுகள் அதிகளவில் குழி தோண்டி வாழ்ந்து வருகிறது. மேலும் இந்த வகை நண்டுகள் மருத்துவக்குணம் கொண்டது. இதை ரசம் வைத்து சாப்பிட்டால் முதுகுவலி, மூட்டுவலி, வயிற்றுப்புண், தீராத காய்ச்சல், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.
இதனால் இதை கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் மருந்துக்காக அதிகம் வாங்கிச் செல்கிறார்கள். தில்லை நண்டுகள் மழைகாலங்களில் அதிகம் 5 கிடைக்கின்றன. வெயில் காலங்களில் சேற்றுமண் இறுகி காணப்படுவதால் கடல் ஓர வாய்க்கால்களுக்கு இந்த நண்டுகள் சென்று விடும். தற்போது அதிராம்பட்டினம் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து மண் ஈரமாக உள்ளதால் தில்லை நண்டுகள் அதிகம் கிடைக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நண்டு மிகவும் சுவை மிகுந்த உணவாக இருப்பதுடன், நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது. நண்டில் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், குறிப்பாக கண் பார்வை, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு பெருமளவில் உள்ளது.
ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நண்டை உணவில் இணைத்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நண்டின் உடல் பகுதியில் 45% வரை ஒருவர் சாப்பிடலாம். இதனால் உடல் வலிமை அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. நாட்பட்ட இதய நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் நண்டு எடுத்துக் கொள்வதால் அதன் பாதிப்பு குறைகிறது மற்றும் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது.
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
அதிராம்பட்டினத்தில் அதிக அளவில் சிக்கும் தில்லை நண்டுகள்; கிலோ ரூ.150க்கு விற்பனை
என்.நாகராஜன்
Updated at:
30 Nov 2023 03:44 PM (IST)
நண்டுகள் வசிக்கும் குழியில் நண்டுகளை கையை விட்டுதான் பிடிப்பார்கள். இதற்கு நல்ல அனுபவம் வேண்டும். குழியில் நண்டு மட்டுமின்றி பாம்புகளும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லை நண்டுகள்
NEXT
PREV
Published at:
30 Nov 2023 03:42 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -