தஞ்சாவூர்: வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியதில் ரூ.26.90 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது தஞ்சை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம், அவரது மகன்கள் உட்பட 11 பேர் மீது தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011-2016ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.26.90 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்துக்கு 57.94 ஏக்கர் நிலம் உள்ளது. 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 2013-ல் சி.எம்.டி.ஏ.விடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. 2013-ல் ஸ்ரீராம் குழுமம் விண்ணப்பித்த நிலையில் 2 ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படவில்லை.
2016-ல் ஸ்ரீராம் குழுமத்துக்கு திடீரென அனுமதி வழங்கியதன் மூலம் பெருமளவு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்தின் மூலம் வைத்திலிங்கத்துக்கு லஞ்சம் கைமாறியதாக தகவல் வெளியாகியது.
வைத்தியலிங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்துக்கு லஞ்சம் கைமாறியதாம். ரூ.27 கோடி லஞ்சம் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல் காட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. கடன் பெற்ற முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் 2014-ல் இருந்து ஒரு ரூபாய் கூட வணிகம் செய்யாதது ஐ.டி தாக்கலில் அம்பலம் ஆனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உரிய ஆவணங்களுடன் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தில் புகார் செய்திருந்தார்.
இந்த புகாரின் அடைப்படையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, ஸ்ரீராம் குழும இயக்குனர் ரமேஷ் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவின் போது அவரது சிலைக்கு மாலை அணிவிக்க தஞ்சைக்கு வந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2025 பிப்ரவரிக்குள் அதிமுக இணைகிறது. 2026-ல் வலிமையாக மீண்டும் ஆட்சிக்கு வரும். அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.
அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். நான் கட்சி வேஷ்டி தான் கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும் என்று தெரிவித்து இருந்தார். கட்சி வேஷ்டி கட்டுவதற்கு வழக்கு போடட்டும் என்று அவர் கூறினார். தன் மீது வழக்கு போடட்டும் என்று எந்த நேரத்தில் வைத்திலிங்கம் கூறினாரோ தெரியவில்லை. தற்போது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு அல்லவா வந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் விமர்சனம் வைக்கின்றனர்.