தஞ்சாவூர்: நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் வயது வரம்பை காரணம் காட்டி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுக்கக்கூடாது என ஏ‌ஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க 39 வது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 39-வது ஆண்டுப் பேரவை தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட செயலாளர் சி.சௌந்தர்ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

பேரவை கொடியை ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்தார். பேரவையை சுமை சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு தொடக்கி வைத்து உரையாற்றினார். நடைபெற்ற பணிகள் குறித்து வேலை அறிக்கையையும், எதிர்கால கடமைகள் குறித்தும் மாநில பொதுச் செயலாளர்        சி. சந்திரகுமார் முன் வைத்து உரையாற்றினார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் தி. கோவிந்தராஜன் முன்வைத்தார். நிர்வாகி டி.கே. சூரிய மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். அஞ்சலி தீர்மானத்தை பி.அன்பழகன் முன்மொழிந்தார். இறந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 10 பேர் குடும்பங்களுக்கு ரூ 10,000 வீதம் ரூ1,00,000 குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர்  கோ.சக்திவேல், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன். அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பி‌. முத்துக்குமரன், உடல் உழைப்பு தொழிலாளர் சங்க பி.சுதா, தையல் தொழிலாளர் சங்க கே.கல்யாணி ஆகியோர் பேரவையை வாழ்த்தி உரையாற்றினர்.

பேரவையில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு நுகர்பொருளா வாணிபக் கழக நிர்வாகம் மிக அலட்சிய போக்குடன் செயல்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள்  விற்பனைக்கு கொண்டு வருவதை உடனடியாக கொள்முதல் செய்யப்படாமல், கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்படாமல்,தேங்கி வீணாகின்ற சூழலும் உள்ளது. எனவே விவசாயிகள் கொண்டு வருகின்ற நெல்லை முழுமையாக தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும், உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளாக கூலி  உயர்வு வழங்கப்படவில்லை, எனவே ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்க வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர்களின் வயதுவரம்பினை காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கக்கூடாது. பணியின் போது மரணம் அடையும்     சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று இறப்பு நலநிதி வழங்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தனியார்மய நடவடிக்கைகள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.