தஞ்சாவூர்: எனது மகனின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவரது தாய் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:


திருவாரூர் மாவட்டம் நரசிங்கமங்கலம் மேட்டு தெரு பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெயர் அமுதா. எனது கணவர் பெயர் சுப்பிரமணியன். எங்களின் இவரது இளைய மகன் பிரபாகரன் திருமங்கலக்கோட்டை கீழையூர் பகுதியில் வசித்து வரும் தர்மராஜ் என்பவரிடம் அவரது தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தர்மராஜ் கடந்த 5 மாதங்களாக சம்பளம் எதுவும் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். எனவே பிரபாகரன் பல முறை தங்கராஜிடம் சம்பளம் கேட்டுள்ளார். இருப்பினும் அவர் சம்பளம் தரவில்லையாம். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பிரபாகரன் மீண்டும் சம்பள பணத்தை கேட்டுள்ளார்.




அப்போது தர்மராஜ் மற்றும் பிரபாகரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எனக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதனால் நேரில் புறப்பட்டு சென்றேன். அப்போது வயல்பகுதியில் உடலில் காயங்களுடன் அவரது மகன் பிரபாகரன் இறந்து கிடந்தார் என அங்கு வேலை செய்தவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான் தர்மராஜை பார்த்து என் மகன் எப்படி இறந்தான் என அமுதா கேட்டேன். அதற்கு உங்கள் மகன் விஷம் சாப்பிட்டு இறந்து விட்டான்.


மேலும் உனது மகன் உடலை எனது இடத்திலேயே அடக்கம் செய்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். அதற்குப் பிறகு என் மகன் இறந்த இடத்திற்கு கிராம மக்களும், கிராம நிர்வாக அலுவலரும் காவல்துறையினரும் வந்தனர். பிரபாகரனின் உடலை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். பின்பு அங்குள்ள பாப்பநாடு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். புகார் வாங்கியதற்கான ரசீதும் தரவில்லை வழக்கும் பதியவில்லை.


புகார் பற்றி இதுவரை எந்த விசாரணை நடத்தவில்லை. மேலும் பாப்பநாடு இன்ஸ்பெக்டர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார். இந்நிலையில் எனது மகன் சாவு குறித்து சிறப்பு காவல்துறை அதிகாரியை நியமித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள பின்னையூர் ஊராட்சியை வேறு தாலுகாவிற்கு மாற்ற கூடாது எனக்கு ஒரு பின்னையூர் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பின்னையூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கிராமம் இரண்டு வருவாய் கிராமங்களை கொண்டது. 35 பின்னையூர் மேற்கு, 35/1 பின்னையூர் கிழக்கு. எங்கள் ஊர் 7000 மக்கள் தொகையைக் கொண்டது. பின்னையூர் ஒரத்தநாட்டில் இருந்து 6 கிலோமீட்டர் அளவில் உள்ளது.


தற்போது பின்னையூரில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவோணம் தாலுகாவில் சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது. எங்கள் ஊரில் இருந்து நேரடியாக பேருந்து வசதி எதுவும் கிடையாது. மேலும் அரசு அலுவலர்கள் சம்பந்தமாக நாங்கள் இருவது கிலோ மீட்டர் சென்று வருவதாக அமைந்துவிட்டால் எங்களுக்கு கிராமத்திற்கு மிகவும் சிரமமாக அமைந்து விடும். எனவே நாங்கள் ஒட்டுமொத்த கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து கொள்வதுடன் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டம் தேர்தல் புறக்கணிப்பு குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாளங்களை ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளோம். எனவே எங்கள் கிராமத்தை தொடர்ந்து ஒரத்தநாடு தாலுகாவிலே நீட்டிக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.