தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வீட்டிற்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். தற்போது பிடிப்பட்ட கொம்பேறி மூக்கன் பாம்புடன் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 876 பாம்புகள் பிடிபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் மக்கள் தொகை வீடுகளின் தேவையை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக நீர்நிலைகள், காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் தற்போது இதே நிலைதான் நீடிக்கிறது. கிராமப்பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்ட வயல்கள் இன்று கான்கிரீட் வீடுகளாக மாறி விட்டன. இருப்பிடம் என்பது எப்படி மனிதருக்கு மிகவும் முக்கியம் என்பதை இது காட்டுகிறது. அதேபோல்தான் மனிதருக்கு மட்டும் இருப்பிடம் அவசியம் கிடையாது, அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடம் முக்கியம். வாய் இல்லாத ஜீவராசிகளுக்கும் வசிப்பிடம் அவசியமாகும், வீடு கட்டுவதற்காக விளை நிலங்களை அழிக்கும் போதும், வனப் பகுதியை ஆக்கிரமிக்கும் போதும் எண்ணற்ற விலங்குகள், பூச்சிகள் பாதிக்கப்படுகின்றன, அதில் முக்கிய இடம் வகிப்பவை பாம்புகள் ஆகும், பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், அது அந்தக் காலம். தற்போது வசிப்பிடம் தேடி ஊருக்குள் அல்லது குடியிருப்புகளுக்குள் பாம்புகள் புகுந்து விட்டால் அதனை விரட்டி அடித்து கொன்று விடுகின்றனர். இவ்வாறு வசிப்பிடம் தேடி வரும் பாம்புகளை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விடும் பணியில் தீயணைப்பு துறையினர், தனியார் அமைப்பினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தஞ்சாவூர் தில்லை நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வீட்டில் பீரோவின் பின்புறம் பாம்பு புகுந்து விட்டது என்று தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் பொய்யாமொழி மற்றும் விமல் ஆனந்தன், பாபு, சாரதி உள்ளிட்ட குழுவினர் பீரேவின் பின்புறம் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் என்ற பாம்பை சாதுரியமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
பின்னர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 ஆயிரத்தி 876 பாம்புகள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஜூன் மாதம் வரை 7 ஆயிரத்தி 876 பாம்புகள் தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக கும்பகோணம் பகுதியில் 2 ஆயிரத்தி 352 பாம்புகளும், குறைந்தபட்சமாக ஒரத்தநாடு பகுதியில் 189 பாம்புகளும், பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுபட்டுள்ளது அதேபோல தஞ்சை பகுதியில் 2 ஆயிரத்தி 271 பாம்புகளும், திருவையாற்றில் 266 பாம்புகளும், திருக்காட்டுப்பள்ளியில் 681, பாபநாசம் 542 , திருவிடைமருதூர் 688, பட்டுக்கோட்டை 618, பேராவூரணி 269 பாம்புகளும் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அனைத்து வகையான பாம்புகளும் வயல்வெளிகள் அழிக்கப்பட்டு வருவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. மக்களும் அந்த பாம்புகளை அடித்து கொன்று விடுகின்றனர். பாம்புகள் இருந்தால்தான் விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் எண்ணிக்கை குறையும். விவசாய நிலங்களில் வீடுகள் கட்டப்படுவதால் பாம்புகளுக்கான வாழ்விடங்கள் குறைந்து கொண்டே வருகிறது. வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் அதை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுவிடுவர் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.