தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் 4 வயது சிறுமி 6 நிமிடத்தில் 100 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் கூறி லிங்கோலன் புக் ஆக் ரெக்கார்ட்டில் உலக சாதனை பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமிக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. 


வெற்றியின் சாவி எங்குள்ளது. தோல்வியிடம்தான் அந்த சாவி உள்ளது. அதை எடுப்பது முயற்சி என்று உழைப்பில் உள்ளது. அந்த முயற்சி விடாமுயற்சி ஆகும் போது சாதனைகள் பிறக்கின்றன. சாதிப்பவர்கள் உருவாகின்றனர். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி... என்றார் பாரதி. திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடும். அந்த வெற்றி உயரத்திற்கு கொண்டு செல்லும். ஆனால் உயரம் கண்டு மயங்காமல் உணர்வை கண்டு மேலும் மேலும் முயற்சிக்கும் போது தடைகள் நொறுங்கும்.




முயற்சிதான் வெற்றியின் முதல்படி. அந்த முதல்படிக்கு செல்வது எப்படி என்று விடை கிடைத்தால் அது வாழ்வின் வெற்றி. உனது வெற்றியை மகிழ்ச்சியுடன் முயற்சியை துணை கொண்டு தேடிப்பார். இதோ நான் இங்கிருக்கிறேன் என்று வெற்றி உன்னை தேடி வரும். உழைப்பு, உழைப்பின் பலன் இது கிடைக்க உழைத்துக் கொண்டே காத்திருக்க வேண்டும். இதை கற்றுக் கொண்டால் காலம் உழைப்பின் பலனை நம் கைகளில் கொடுக்கும். அதுதான் மகிழ்ச்சியான வெற்றியாக இருக்கும்.


அதுபோன்று அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- உமா மகேஸ்வரி தம்பதியின் மகள் ரிதன்யா (4). இவர் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தன் அப்பா, அம்மா அளித்த பயிற்சியில் ஒரே வாரத்தில் 100 பொது அறிவு கேள்விகளை மனப்பாடம் செய்து அதற்கு பதில் சொல்லி அசத்தியுள்ளார். தொடர்ந்து 6 நிமிடத்தில் 100 பொது அறிவு கேள்விகளுக்கு மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் பதில் சொல்லி லிங்கன் புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனையை பதிவு செய்தார். இதற்காக சான்றிதழ் மற்றும் விருதை சிறுமி ரிதன்யாவுக்கு மேயர் சண்.ராமநாதன் வழங்கி பாராட்டினார்.


இதேபோல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ராஜகிரியை சேர்ந்த தாமோதரன்-கலையரசி தம்பதியின் மகன் 4ம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் (8) தொடர்ந்து 30 நிமிடங்கள் நடனம் ஆடி சாதனை செய்தற்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்ராஜ்குமார் – சங்கீதா தம்பதியின் மகள் டனுஸ்ரீசிவன்யா (3) 400 வார்த்தைகளுக்கு விளக்கத்தை 9 நிமிடத்தில் தெரிவித்து மேயர் சண்.ராமநாதனிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றார். இந்த சிறுமியும் லிங்கன் புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை பதிவை செய்துள்ளார். மேலும் வரும் 3ம் தேதி கலாம் புக் ஆப் ரெக்கார்ட்டில் சாதனை பதிவை செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல், சிறப்பு விருந்தினராக கிறிஸ்டோபர் ஜோசா, நிர்மல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.