தஞ்சாவூர்: 589 ஊராட்சிகளை சேர்ந்த 3600 பயனாளிகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டப்பணிகளில் பயன் பெறுகின்றனர் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை கீழ் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணைக்காடு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பின்னர் அவர் தெரிவித்ததாவது:
ஊரகப்பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம்" என்ற திட்டத்தின்கீழ், நடப்பு நிதியாண்டில் ரூ.3,50,000 மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதன் மூலம் 6 ஆண்டுகளில் குடிசைகள் இல்லா மாநிலம் என்ற இலக்கினை அடைய தமிழக அரசு முனைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் 378 பயனாளிகளுக்கும், பூதலூர் ஒன்றியத்தில் 168 பயனாளிகளுக்கும், கும்பகோணம் ஒன்றியத்தில் 332 பயனாளிகளுக்கும், மதுக்கூர் ஒன்றியத்தில் 198 பயனாளிகளுக்கும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் 244 பயனாளிகளுக்கும், பாபநாசம் ஒன்றியத்தில் 300 பயனாளிகளுக்கும், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 276 பயனாளிகளுக்கும், பேராவூரணி ஒன்றியத்தில் 264 பயனாளிகளுக்கும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 225 பயனாளிகளுக்கும், தஞ்சாவூர் ஒன்றியத்தில் 242 பயனாளிகளுக்கும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 327 பயனாளிகளுக்கும், திருவையாறு ஒன்றியத்தில் 200 பயனாளிகளுக்கும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 302 பயனாளிகளுக்கும், திருவோணம் ஒன்றியத்தில் 144 பயனாளிகளுக்கும் என மொத்தம் 14 ஒன்றியங்களில் 2024-2025ம் ஆண்டில் 589 ஊராட்சிகளில் 3600 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம்" திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
1 லட்சம் வீடுகள்... 6 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலம்
2024-25 ஆம் நிதியாண்டில் 1 லட்சம் வீடுகள் ரூ.3,50,000 மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதன் மூலம் 6 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கீட்டினை அடைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் பயன்பெறலாம். தற்போது வரை குடிசைகளில் தொடர்ந்து வசித்து வரும் KVVT மறுகணக்கெடுப்பு பட்டியலில் உள்ள பயனாளிகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். KVVT மறுகணக்கெடுப்பில் தகுதியான குடும்பங்கள் இல்லாத பட்சத்தில் KVVT புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் உள்ள குடும்பங்கள் மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
தகுதிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
பட்டா அல்லது உரிமை ஆவணம் உள்ள குடும்பங்கள் மட்டுமே தகுதிபெறும். அவர்கள் பட்டா அல்லது உரிமை ஆவணம் உள்ள இடத்தில் அல்லது நிலத்தில் வீடுகள் கட்டப்படும். புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நிரந்தர வீடுகள் வழங்கப்பட மாட்டாது. புதிய வீடுகள் SC/ST மற்றும் இதர பிரிவினருக்கு 60:40 என்ற விகிதாசார அடிப்படையில் மாவட்டங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
tnrd.tn.gov.in மற்றும் tndrdpr.org இணையதளத்தில் உள்ள தகுதியான பயனாளிகளில் பட்டியல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரால் மாவட்டங்களுக்கு பகிரப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரால் பகிரப்பட்ட கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் ஒரு நிதியாண்டிற்கான தொகுதி வாரியாக மற்றும் கிராம பஞ்சாயத்து வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப்படும்.
மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு
பெண் உறுப்பினர் பெயரில் பட்டா இருந்தால் பெண் குடும்ப உறுப்பினர் யெரில் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும். பட்டா ஆண் பெயரில் இருந்தால், மனைவி மற்றும் கணவன் பெயரில் கூட்டாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெண் உறுப்பினர் இல்லை என்றால், குடும்பத்தின் ஆண் உறுப்பினரின் பெயரில் வீடு ஒதுக்கப்படலாம். மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 5% மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்.
பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கும் போது, மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுப் படையின் ஓய்வு பெற்றவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளளைக் கொண்ட குடும்பங்கள் (அடையாளம் காணப்பட்டபடி) போன்ற சிறப்புப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
ஐசிடிஎஸ் துறை, திருநங்கைகள், எச்ஐவி, எய்ட்ஸ், காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரால் (சுகாதார சேவைகள்) சான்றளிக்கப்பட்டவர்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள். மனநலம் குன்றிய குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.