தஞ்சாவூர்: இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய வடுவூர் அபினேஷ்க்கு பாராட்டு விழா எடுத்து கௌரவப்படுத்தி அசத்தி உள்ளார் தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி. தஞ்சை மக்கள் மத்தியில் இந்த பாராட்டு விழா முக்கியமானதாக மாறி உள்ளது.

Continues below advertisement


பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கபடிய அணியின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டனர்.


ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்றவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அபினேஷ். இவருக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் முரசொலி எம்.பி. ஏற்பாட்டின்பேரில் பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.




விழாவிற்கு தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்எல்ஏ., துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மேயர் சண்.ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம், சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., முரசொலி தனது வரவேற்பு உரையில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி பிடித்த அபினேஷை வெகுவாக பாராட்டினார். 


இதில் இந்திய அணியின் முன்னாள் கபடி வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான காசி.பாஸ்கரன், இந்திய கபடி அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய புரோகபடி லீக் பயிற்சியாளருமான தர்மராஜ்சேரலாதன் ஆகியோர் கலந்து கொண்டு கபடி வீரர் அபினேஷை பாராட்டி பேசி நினைவு பரிசுகளை வழங்கினர். விழாவில் அபினேசுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


முன்னதாக கபடி வீரர் அபினேஷ், தஞ்சை மணிமண்டபம் பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க, பொதுமக்கள் திரண்டு வர ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். விழாவில் தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், தஞ்சை மாவட்ட கல்வி அதிகாரி மாதவன், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், தி.மு.க. நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கபடிப் போட்டியால் உடல் ஆரோக்கியம் மேம்படும், சுறுசுறுப்பு அதிகரிக்கும், மற்றும் மன வலிமை, கவனம் போன்ற திறன்கள் வளரும். இது ஒரு குழு விளையாட்டு என்பதால், ஒருங்கிணைந்த குழுப்பணியை வளர்க்கவும் இது உதவுகிறது. 


ஆட்டத்தில் ஈடுபடும்போது, மின்னல் வேகத்தில் எதிரிகளைத் தொடுதல் மற்றும் தப்பித்தல் போன்ற செயல்கள் உடலின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கின்றன. திடீரென முன் பாய்ந்து பின்வாங்குதல் மற்றும் எதிரிகளைத் தடுத்தல் போன்ற செயல்களால் உடல் தசைகள் வலுவடைகின்றன. இது ஒரு முழுமையான உடற்பயிற்சி என்பதால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.