தஞ்சாவூர்: ஆஞ்சியோகிராமில் தெரியாத இதய நுண் இரத்த நாள பாதிப்புகளை கண்டறிய தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது. இதன் மூலம், 4 நோயாளிகளின் உடல்நிலை பாதிப்பு குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதய சிகிச்சையில் ஒரு முன்னோடி முயற்சியாக, இதயத்தின் நுண் இரத்த நாளங்களில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறியும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. 'கோரோவென்டிஸ் கோரோஃபுளோ' எனப்படும் இந்த நவீன நோயறிதல் முறையை முதன்முறையாகப் பயன்படுத்தி, நான்கு நோயாளிகளுக்கு நுண் இரத்த நாள அடைப்புகள் மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகள் குறித்த துல்லியமான மதிப்பீட்டை இம்மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இதயவியல் சிகிச்சையில் முதுநிலை நிபுணரும், துறைத் தலைவருமான மருத்துவர் பி. கேசவமூர்த்தி கூறுகையில், "ஒருவருக்கு ஆஞ்சியோகிராம் முடிவு முற்றிலும் இயல்பாக இருந்தாலும், 'நுண் நாள ஆஞ்சைனா' அல்லது ரத்த நாளச் சுருக்கம் காரணமாகக் கடுமையான நெஞ்சு வலி அல்லது ரத்த ஓட்டக் குறைபாடு ஏற்படலாம். இதனால்தான் பெண்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களில் 20-30% பேருக்கு, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் எந்த அடைப்பும் இல்லை என்று வந்தாலும் நெஞ்சு வலி தொடர்கிறது. 

Continues below advertisement

இதனைக் கண்டறியாமல் விட்டால், இதயத் தசை பாதிப்பு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு மற்றும் அரிதாகத் திடீர் மரணம் கூட ஏற்படலாம். வழக்கமான ஆஞ்சியோகிராமில் கண்டறிய முடியாத இந்தப் பாதிப்புகளைக் கண்டறிய, நுண் இரத்த நாள மதிப்பீடு எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.

இதய சிகிச்சையில் புதிய பரிமாணங்களைச் சாத்தியமாக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கரோனரி நுண் நாள நோயைக் கண்டறிவதில் 'கோரோவென்டிஸ் கோரோஃபுளோ' ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது அழுத்தம் மற்றும் வெப்பநிலையை உணரும் பிரத்யேக 'கைடுவயர்' மூலம் செயல்படுகிறது. இது, சிறிய இரத்த நாளங்களில் உள்ள எதிர்ப்புத்திறனை குறிக்கும் IMR மற்றும் மன அழுத்தத்திற்கு ஏற்ப இரத்த ஓட்டம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதைக் காட்டும் CFR போன்ற முக்கிய அளவீடுகளைத் துல்லியமாகக் கணிக்கிறது. 

ஆஞ்சியோகிராம் இயல்பாக இருக்கும்போதும் நுண் நாளச் செயல்பாட்டுக் குறைபாடுகளைக் கண்டறிய இது உதவுகிறது. இது ஒரு ஊடுருவும் செயல்முறையாகவும், சிறப்பு நிபுணத்துவம் தேவைப்படும் உத்தியாகவும் இருந்தாலும், வழக்கமான சோதனைகளில் தெளிவான விடை கிடைக்காத, காரணத்தை விளக்க முடியாத நெஞ்சு வலி இருக்கும் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வாறு அவர் கூறினார். 

இதயவியல் துறை நிபுணர்களான மருத்துவர் பி. சபரி கிருஷ்ணன் மற்றும் மருத்துவர் ஏ. சீனிவாசன் ஆகியோர் கூறுகையில், "நவீன இதய சிகிச்சையில், குறிப்பாக இரத்த நுண் நாளச் செயல்பாட்டுக் குறைபாடுகளை மதிப்பிடும்போது, துல்லியமான வகைப்பாடு அவசியம். இந்த நவீன தொழில்நுட்பம், பெரிய தமனிகள் மற்றும் நுண் நாளங்கள் இரண்டிலும் இரத்த ஓட்டத்தை அளவிட்டு, எந்த வகையான குறைபாடு உள்ளது என்பதைத் துல்லியமாக அடையாளம் காண உதவுகிறது.

இது நோயாளிகளுக்குத் தவறான சிகிச்சையைத் தவிர்க்கவும், அவர்களுக்கு ஏற்ற மிகச் சரியான மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கவும் உதவுகிறது. சில நேரங்களில் மருந்தே தேவையில்லை என்பதையும் இது உறுதிப்படுத்தலாம். இந்தச் சோதனையானது அனுமானங்களை நீக்கி, ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் அடிப்படைப் பிரச்சனைக்கேற்ற சரியான சிகிச்சையை உறுதி செய்கிறது," என்று தெரிவித்தனர்.

பேட்டியின் போது மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் வி. பிரவீன் உடனிருந்தார்.