தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


ஸ்மார்ட் சிட்டி:


தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல பணிகள் நிறைவடைந்துள்ளது. முக்கியமாக தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் நிறைவடைந்து இயக்கத்திற்கு வந்து விட்டது. இதேபோல் பழைய பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், புதிய பஸ்ஸ்டாண்ட் பின்புறம் வணிக வளாகம், ஆம்னி பஸ்ஸ்டாண்ட் என்று பல்வேறு பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 


இதேபோல் சாலைப்பணிகள் உட்பட ஏராளமான பணிகள் நிறைவடைந்துள்ளது. தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளில் ரூ. 20 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. முன்பு இந்த வடிகாலில் அனைத்துக் கட்டடங்களும் சாக்கடை நீர் செல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.


ஆக்கிரமிப்புகள் அகற்றம்:


மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் இப்போது அகலமான சாலையாக உள்ளது. மன்னர்கள் காலத்தில் இருந்தது போன்று நான்கு ராஜ வீதிகளும் விரிவுபடுத்தப்பட்டு, மழை நீர் வடிகால் அமைப்பதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை டேனியல் தாமஸ் நகரில் இருந்து டி.பி.எஸ். நகர் வரை சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை 80 அடி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.


தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் பல இடங்களில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜப்பா பூங்கா கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சேதமடைந்த ஆற்று பாலங்கள் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்:


தஞ்சை மாநகராட்சி முழுவதும் ஸ்மார்ட் சிட்டிக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளும் மற்ற கட்டட பணிகளும் கட்டப்பட்டும், சில பணிகள் நடைபெற்றும் கொண்டிருக்கின்றது. தஞ்சை நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள ரவுண்டானாவான டேனியல் தாமஸ் நகரில் இருந்து மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள டி.பி. எஸ்.நகர் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.


அதன்படி, இந்த சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை 80 அடி சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. அதன்படி சிலர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர். அகற்றாத இடங்களில் மாநகராட்சி பொக்லின் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கியது.


மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டார். மேலும் சாலை விரிவாக்கத்துக்காக தனியாரும் இடம் அளித்துள்ளனர்.


அந்த இடத்தில் உள்ள சுற்றுச்சுவர் மற்றும் கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. தொடர்ந்து டி.பி.எஸ். நகர் வரையிலான 2 கி.மீ. தூரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு சாலை அகலப்படுத்தப்பட்ட பின்னர் மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைத்து அதில் மின்கம்பங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.