தஞ்சை- புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 2022 – 23 ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் கடந்த நவம்பர் 23ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது அரவை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கரும்பாலை கழிவுகளை சேமித்து வைக்கக்கூடிய பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகள் அருகில் அமைக்கப்பட்டு இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில், ட்ரான்ஸ்பார்மர் சேதமடைந்தது.

இதனால் மின்சாரம் தடைப்பட்டு அரவை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் தேக்கமடைந்தது. இருப்பினும் சுவர் விழுந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை. தொடர்ந்து சேதமடைந்த ட்ரான்ஸ்பார்மை பணியாளர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.





இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "சா்க்கரை ஆலையில், கரும்பாலைக் கழிவு (மொலாசஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கரும்பாலைக் கழிவு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு பொது ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்தின் ஏல தொகையை வழங்க முடியாத சூழலில், கரும்பாலை கழிவுகளை எடுக்க முன்வரவில்லை. இதனால், கரும்பாலை அதிகளவில் தேக்கமடைந்து, சுவரின் தன்மை மாறி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட காரணமாகி விட்டது" என்றனர்.

இந்த கரும்பு ஆலைக்காக முன்பு ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. பணம் வழங்குவதில் காலதாமதம் உட்பட பல்வேறு காரணங்களால் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆலைக்கரும்புக்கு உற்பத்தி செய்வதை விட்டு மக்காச்சோளம், கடலை என்று மாற்றுப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

முன்பு 25 ஏக்கர், 50 ஏக்கர் என்று கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அதனை 15 ஏக்கர், 10 ஏக்கர் என்ற அளவில் மாற்றிக் கொண்டு விட்டனர் என்றும் கரும்பு விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருட பயிரான கரும்பை சாகுபடி செய்து அரவைக்கு அனுப்பி அங்கிருந்தும் ஆண்டுக்கணக்கில் பணம் வராமல் வட்டிக்கு வட்டி கட்டி அவஸ்தை அடைவதை விட மாற்றுப்பயிர் செய்து மகசூல் செய்த உடனேயே பணம் கிடைத்து விடுவதால் பல விவசாயிகள் கரும்பு சாகுபடியை மாற்றி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.