கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சை மேலவீதி யாதவ கண்ணன் கோயிலில் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்து. பின்னர் இரவு உறியடி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி உறியடித்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சை மேலவீதி நவநீத கிருஷ்ணன் கோயிலில் ஆண்டுதோறும் உறியடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 22-வது ஆண்டாக உறியடி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பூச்சொரிதல், கோபூஜை ஆகியவையும் நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடத்தில் வந்து பங்கு பெற்றனர். முக்கிய நிகழ்ச்சியான உறியடி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை உறியடி குழு தலைவர் கோபால், செயலாளர் சரத்யாதவ் மற்றும் யாதவ கண்ணன் பக்த கோடிகள் மற்றும் தஞ்சை ராஜாக்கோட்டை யாதவர்கள் செய்திருந்தனர். இதேபோல் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த வரகூர் கோயிலிலும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் திருப்பூந்துருத்தி எனும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோயிலையும் அடையலாம்.
அதுமட்டுமா? இந்தத் தலத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறச் செய்தார். வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜெயந்தியின் போது ஆண்டுதோறும் உறியடி உத்ஸவம் நடக்கிறது. அதேபோல் இந்தாண்டும் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி வரகூர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், இரவு உறியடி உற்சவம் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நடந்த உறியடியில் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு உறியடிக்க முயற்சித்தனர். வழுக்கு மரம் ஏறி பலரும் சறுக்கி கொண்டே வந்தனர். இவர்கள் மீது நாலாபுறமும் இருந்து தண்ணீர் வாரி இறைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.