மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என நாகையில் நடைபெற்ற மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

 

நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழா  இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். 215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட  339 மாணவ மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார். பின்னர் ஆளுநர் வாசிக்க பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில், உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம், அடுத்த வர 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

 



 

 

பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மகளிர் மேம்பாடு, தொழிற்துறை , உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.

 

மேலும் நிகழ்ச்சியில் மாநில மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக  கூறினார். பட்டமளிப்பு விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், பல்கலைகழக துணை வேந்தர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதாமுருகன், மீன்வளத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகை தந்ததை அடுத்து நாகை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.