தஞ்சாவூர்: தலைக்கவசம் உயிர் காக்கும்... அதை அணிந்து வந்தால் தங்கக் காசு உங்களுக்கு கிடைக்கும் என்று ஆண்டின் முதல் நாளான நேற்று தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு அட்டகாசமான பரிசாக தங்கக்காசை பரிசு கொடுத்து ஆனந்தப்பட வைத்துள்ளனர் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர்.
தலைக்கவசம் அணிவதால் சாலையில் வரும் பூச்சிகளிடமிருந்தும், காற்றில் பறக்கும் தூசிகளிடமிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தலைக்கவசம் அணிவதனால் விபத்தின்போது தலைப்பகுதியில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. விபத்து ஏற்படும்போது, தலையில் காயம் ஏற்பட்டு மூளையில் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதனால் கை, கால்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இத்தகைய நிலைமையில், அதிகபட்சமாக மூளை செயலிழந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகள் செயலிழந்தால், அவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், மூளையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. பல்வேறு வகைகளிலும், விலைகளிலும் தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தரமான தலைக்கவசங்களை அணிவதே வாகன ஓட்டுனர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்று பல்வேறு வகையிலும் அரசும், காவல்துறையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அவ்வாறு தலைக்கவசம் அணிந்து வந்த தங்கங்களுக்கு நாங்கள் தங்கமே தருகிறோம் என்று புத்தாண்டு சர்ப்ரைசாக தாம்பூலத்தட்டில் சாக்லேட், பூக்கள் வைத்து தங்க காசு, வெள்ளிக் காசு பரிசாக வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் பரிசாக வழங்கினார்.
தலைக்கவசம் அவசியம் குறித்து காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம் என காவல்துறையினருடன் இணைந்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை பெரியகோயில் சாலையில் தலைக்கவசம் அணிந்து சென்ற பெண்களை ஒருங்கிணைத்து நிறுத்தி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் சட்டென்று சர்ப்ரைஸாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் தாம்பூல தட்டில் பூக்கள், சாக்லேட் வைத்து அதனுடன் தங்கக் காசும், வெள்ளிக்காசும் வழங்கி ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தினர்
எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்க்காத விலைமதிப்பற்ற பொருளை புத்தாண்டு பரிசாக கொடுத்து அசத்தி உள்ளனர் ஜோதி அறக்கட்டளையினர். இந்த பரிசு பொருள் எப்படி உயர்ந்ததோ அதேபோல் உங்களின் உயிரும் உங்கள் குடும்பத்தினருக்கு உயர்ந்தது. எனவே தலைக்கவசம் அணியாமல் செல்லக்ககூடாது. தலைக்கவசம் நம் உயிரை பாதுகாக்கும் உயிர் கவசமாகும். இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிதல் வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் ஜோதி அறக்கட்டளையினர்.
புத்தாண்டில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இன்ப பரிசாக தங்கக்காசு கொடுத்தது மட்டுமின்றி தலைக்கவசத்தின் அவசியத்தை அட்டகாசமாக வலியுறுத்திய ஜோதி அறக்கட்டளையினருக்கு பரிசு பெற்றவர்கள் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி, நிர்வாக உதவியாளர் குகனேஸ்வரி, தன்னார்வலர் ஆர்த்தி, கல்யாண சுந்தரம் மற்றும்ட பலர் செய்திருந்தனர். ஜோதி அறக்கட்டளையின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.