தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 24ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் எம்.பில்., முடித்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி என்பவர் பட்டம் பெற வந்தார்.

அவரை போலீஸார் பட்டம் பெற விடாமல் தடுத்து அவர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயல்கிறார் என்று கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் அவரது ஆடைகளைக் களைந்தும் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் அப்போதே பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் எழுப்பியது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதை ஒட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் ஏறி குதித்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.




அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்த தடுப்புகளை மீறி முன்னேற முயன்ற மாணவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிக் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 24ம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வரும் ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அப்போது விழா அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பான, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்தசாமி பட்டம் பெற வந்திருந்தார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார். அப்போது அங்கு வந்த புலனாய்த்துறை மற்றும் தனிப்பிரிவு, க்யூ பிரிவு போலீஸார் அரவிந்த்சாமியை அரங்குக்கு வெளியே அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர்.

மேலும் அவர் கருப்பு சட்டை அணிந்திருந்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். சுமார் 30 நிமிடங்கள் அவரை சோதனை நடத்திய பின்னர் மீண்டும் விழா அரங்குக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ஆளுநர் விழா அரங்கத்துக்குள் வந்ததும் அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக அரங்கத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர்.




தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டு சென்ற பின்னர். பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் அரவிந்தசாமிக்கு பட்டங்களை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.