தஞ்சை மாவட்டம் வளம்பக்குடி கீழத்தெருவை

  சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (52). விவசாயியான இவர், சமோசா விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ராசாத்தி (44). இவர்களுக்கு ஒரு மகளும், பாலமருகன் (22), பாரதி (20) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது. பாலமுருகன், பாரதியும், வளப்பக்குடியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு டீ, பலகாரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி, தினந்தோறும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவி ராசாத்தியிடம், பணம் கேட்டு தொந்தரவு செய்தும், பணத்தை பறித்து கொண்டு குடித்து வருவதுமாக இருந்துள்ளார்.  இதனால்,கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி, வீட்டிற்கு வந்த, கதவினை தாழித்து விட்டு, குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் ராசாத்தி பணம் கொடுக்க மறுத்து விட்டார். மேலும் தீபாவளி பண்டிகை வருவதால், செலவுகள் அதிகமாக உள்ளது. மகனுக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி, குடிப்பதற்கு பணம் கேட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது. இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, ராசாத்தியை கொலை செய்தார். ராசாத்தி இறந்து விட்டார் என்று தெரிந்த கிருஷ்ணமூர்த்தி, வெளியில் தெரிந்தால், பிரச்சனையாகி விடும், ஊரில் வாழ முடியாது, அவப்பெயர் தான் கிடைக்கும் என்று பயத்தில், வீட்டிலுள்ள மற்றொரு அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.




வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த மகன் பாரதி, கதவினை திறக்க முயன்றார். ஆனால் வீட்டின் கதவில் உள்ளே தாழிட்டிருந்தது. வெகுநேரம் கதவை தட்டி பார்த்து. தாயையும், தந்தையையும் அழைத்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை, எந்தவிதமான பதிலும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாரதி, அருகிலுள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார். பின்னர், பாரதி மற்றும் அக்கம்பக்கத்தினர் முன் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே ராசாத்தி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.  தந்தையை தேடி பார்த்த போது, மற்றொரு அறையில் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மேலும் பாரதி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் தன் மனைவியை கொலை செய்து விட்டு கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குடிப்பதற்கு பணம் தராத மனைவியை கொலை செய்து விட்டு, கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.