தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பூண்டு மற்றும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் குடும்பத் தலைவிகள் கவலையில் உள்ளனர். சமையலுக்கு முக்கியமாக தேவைப்படும் பூண்டு, தக்காளி ஆகியவை கடந்த சில மாதங்களாக விலை உயர்வும் பின்னர் குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது பல வாரங்களாக இறங்கு முகத்தில் இருந்த பூண்டு, தக்காளி விலை விர்ரென்று உயர்ந்து வருகிறது. 


நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தை
 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், திருப்பூந்துருத்தி, பள்ளிஅக்ரஹாரம், மருங்குளம், வேங்கராயன்குடிகாடு, கொல்லாங்கரை, கண்டிதம்பட்டு, நடுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தினசரி அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.


அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில்  பூண்டும் ஒன்று. சைவம், அசைவம் என இரண்டிலுமே பூண்டின் தேவை காலத்திற்கும் மாறாதது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடுசெய்வதற்கு, மற்ற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.


பூண்டு வரத்து மீண்டும் குறைந்துள்ளது


ஆண்டுதோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை செய்யப்படும். இந்நிலையில் பூண்டின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த சில மாதங்களாக  பூண்டின் விலை அதிகளவில் இருந்தது. ஏறுமுகத்தில் சென்ற பூண்டின் விலை பின்னர், படிப்படியாக குறைந்தது. தற்போது தஞ்சை உழவர் சந்தைக்கு பூண்டு வரத்து மீண்டும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அதன் விலை மீண்டும் ஏறுமுகத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பூண்டு விலை 1 கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை உச்சம் தொட்டுள்ளது.


சில்லறை கடைகளில் ரூ.300க்கு விற்பனை


சில்லறை விற்பனை கடைகளில் பூண்டு கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கியமாக குடும்பத் தலைவிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதேபோல் தஞ்சையில் வரத்து குறைவால்  தக்காளி விலை அதிகரித்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளிலை குறைவான அளவில் வாங்கிச் செல்கின்றனர்.




தக்காளி விலை உயர்வு


தஞ்சையில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டியும், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 


இதேபோல் தஞ்சையில் இருந்தும் வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 3 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக தஞ்சையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது.  


ரூ.70 ஐ தொட்ட தக்காளி விலை


காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தக்காளியை வழக்கமாக வாங்கும் அளவை காட்டிலும் குறைந்த அளவே வாங்கி சென்றனர். இதேபோல் உணவகங்களுக்கு காய்கறி வாங்குபவர்களும் தக்காளியை குறைந்த அளவே வாங்கி சென்றனர். இதேபோல் முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ரூ.96க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று ரூ.110க்கும், ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ்ரூ.146க்கும் விற்பனை செய்யப்பட்டது.