தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் 25 பேர் காயமடைந்தனர். ஒரு பெண் பலியானார்.

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று தஞ்சாவூர் நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தது.

 

பஸ்சை டிரைவர் சண்முகம் (48) ஓட்டி வந்தார். அப்போது மானாங்கோரை பகுதியில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வாய்க்காலில் கவிழ்ந்தது. இதனால் பஸ்ஸில் உள்ள பயணிகள் பயத்தில் அலறினர். பயணிகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பஸ்ஸில் வந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 25 பயணிகள் காயமடைந்தனர். உடன் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில் தஞ்சாவூரை சேர்ந்த லட்சுமி (50) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.