தஞ்சாவூர்: அழியாத, அழிக்க முடியாத பெருமையை கொண்ட தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள் உலக அளவில் அனைவர் மத்தியிலும் உயர்வான இடத்தை பிடித்துள்ளது.


தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களில் கலை வளர்ப்பில் முன்னோடியாகக் விளங்கியவர் இரண்டாம் சரபோஜி. கடந்த 19 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இவர் தஞ்சாவூரில் காலங்காலமாக இருந்து வந்த சோழர், நாயக்கர் கால கலைகளையும் விட்டுவிடாமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர்.  தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு, தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் போன்ற கலைகளையும் வளர்த்தெடுத்தார்.


இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக முன்னாள் காப்பாளர் ப. பெருமாள்.கூறுகையில், ஆங்கிலேயர்களிடமிருந்துதான் இந்தக் கண்ணாடி ஓவியம் நம்மிடம் வந்திருக்கும். ஆனால், கண்ணாடியில் வரைவது அவர்களுடைய தொழில்நுட்பமாக இருந்தாலும், அதில் தீட்டப்படும் ஓவியம் நம்முடைய பாணிதான். எனவே, இந்தப் புதிய கலைக்கு தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் என்ற பெயர் வந்தது.




இப்படி உருவான தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்துக்கு காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் போதிய ஆதரவு கிடைக்காததால் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இச்சூழ்நிலையில் இக்கலையை மீட்டெடுக்க மத்திய அரசு பெரும் முயற்சி மேற்கொண்டு 1979ம் ஆண்டு கண்ணாடி ஓவியப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. இதன் மூலம் ஏறத்தாழ 10 பேர் பயிற்சி பெற்று இக்கலையை வளர்த்தெடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இக்கலை மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருந்ததால், இதைச் சார்ந்து வாழ்ந்த கலைஞர்கள் வெவ்வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் ஓவியராகப் பணியாற்றும் ராராமுத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அ. குமரேசன் 25 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், சுவரோவியம் உள்பட பல்வேறு கலைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் கண்ணாடி ஓவியம் குறித்து கூறியதாவது:


மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி காலத்தில் நம்முடைய தமிழ்நாட்டு ஓவிய பாணியைக் கண்ணாடியில் வரையும் தொழில்நுட்பம் வந்தது. அக்காலத்தில் கண்ணாடி ஓவியம் புதிதாக இருந்தாலும், அதில் வரையப்படும் உடலமைப்பை மிகைப்படுத்துதல், நளினத்தன்மை, இரண்டு பரிமாண தோற்றம் போன்றவை நம்முடைய கலை பாணிதான். முதலில் நீர் வர்ணம் மூலம் கண்ணாடியில் கோட்டோவியம் வரையப்படும். அதன் பின்னர் எண்ணெய் வர்ணம் மூலம் ஆடை, முகம், கை, கால் உள்ளிட்ட பாகங்களுக்கு தீட்டப்படும். ஆடை உள்ளிட்டவற்றுக்கு வெளிர் நிறமும், அடர்த்தியான வண்ணமும் பயன்படுத்தப்படும்.





ஆபரணங்களுக்கு வெள்ளி, செம்பு, தங்க நிறங்களாலான காகிதத்தைத் தேவையான அளவுக்கு கத்தரித்து கசக்கி அதன் மீது ஓட்டிவிட்டால், அதைக் கண்ணாடி வழியாக பார்க்கும்போது, தங்கம், வெள்ளி, முத்துக்கள் போன்று மிளிரும். இந்தக் கண்ணாடி ஓவியத்தைப் பொருத்தவரை கண்ணாடியின் பின்புறம் வரைய வேண்டும். பின்புறத்தை பிரேம் பொருத்தி முன்புறம் பார்க்கும்போது, அது கண்ணாடி ஓவியமாகத் தெரியும். கண்ணாடியின் பின்புறம் வரைய வேண்டியுள்ளதால், தலைகீழாகத் தீட்ட வேண்டும். எனவே, மூக்குத்தி, வலது கையில் அருள் புரிதல், சூலாயுதம் போன்ற ஆயுதங்கள், சேலை மடிப்பு போன்றவற்றை நேரெதிராக வரைய வேண்டும். இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை முன்புறம் கண்ணாடி வழியாக பார்க்கும்போது சரியான வடிவத்தைக் காண முடியும். இதனால், இதை ரிவர்ஸ் பெயிண்டிங் என ஆங்கிலத்தில் கூறுவர்.


இந்தக் கண்ணாடி ஓவியத்தைச் சட்டகத்தில் பொருத்தும்போது, வரைந்த பகுதி பின்புறம் போய்விடும். முன்புறம் கண்ணாடி வழியாக பார்க்கும் விதமாக இந்த ஓவியம் இருப்பதால், காலத்தால் அழியாமல் நீடித்து இருக்கிறது. தொடக்கத்தில் கண்ணன் ஓவியங்கள் அதிகமாக இருந்தன. இதற்கு அடுத்து விநாயகர் ஓவியங்களும் சில வரையப்பட்டன. தற்போது கண்ணன், விநாயகர் மட்டுமல்லாமல், சிவன் -பார்வதி, நடராஜர், முருகன், வெங்கடாஜலபதி, ராமர் பட்டாபிஷேகம், சரஸ்வதி, லட்சுமி போன்ற தெய்வ உருவங்களும், யானை, மயில், அன்னபட்சி உள்ளிட்ட விலங்கு, பறவை உருவங்களும் என்ற வாங்குபவர்கள் விரும்பிக் கேட்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.


அக்காலத்தில் இயற்கையான பொருள்களில் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டன. தற்போது செயற்கை பொருள்களால் செய்யப்பட்ட வர்ணங்கள் நிறைய வந்துவிட்டன. இதேபோல, கண்ணாடி ஓவியம் தீட்டுவதிலும் இப்போது நவீன முறைகள் வந்துவிட்டன. ஏற்கெனவே காகிதத்தில் வரையப்பட்ட ஓவியத்தின் நகலை கண்ணாடியின் கீழே வைத்து மேல்புறம் தீட்டப்படுகிறது. எனவே, தூரிகையைப் பிடித்து வரைய தெரிந்தால், கண்ணாடி ஓவியத்தில் தேர்ச்சி பெறலாம். ஆனால், கண்ணாடி வழுக்கும் என்பதால், அதில் தூரிகையைப் பிடித்து வரைவது சற்று கடினம். அதற்கு பயிற்சி பெற்றால் வரைவது எளிதாக இருக்கும். அப்போதுதான் அந்த ஓவியத்தில் நளினத்தன்மை இருக்கும்.


அண்மைக் காலமாக இந்த தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்தைக் கற்றுக் கொள்வதற்கு நிறைய பேர் ஆர்வமாக முன் வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதைக் கற்றுக் கொண்ட பலர் தொடர்ந்து இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய ஓவியமாக இருந்தால் ரூ. 300ம், பெரிய ஓவியமாக இருந்தால் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், கண்ணாடி கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கு வரையும்போது ஏறத்தாழ ரூ. 20 ஆயிரமும் வருவாய் கிடைக்கும். சிறிய வகை ஓவியத்தை ஒரு நாளில் 2 அல்லது 3 வரைய முடியும். பெரிய ஓவியத்துக்கு ஒரு வாரம் கால அவகாசம் தேவைப்படும். எனவே, இந்த ஓவியத்துக்கு நிறைய வரவேற்பு இருப்பதால், ஓரளவுக்கு வருவாயும் கிடைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.