ஆற்றில் வளரும் மீன்களை பாதுகாக்க வேண்டும். மேலும் இயற்கையான முறையில் மீன்களின் உற்பத்தியை பெருக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் அரசலாறு நீரொழுங்கி பகுதியில் இயற்கையான முறையில் உற்பத்தியாகி ஆற்றில் நீந்தி வரும் மீன்களை பிடித்து வியாபாரம் செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அரசலாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரொழுங்கி பகுதியில் அதிகாலை 5 மணி முதலே மீன்பிடிக்க தொடங்குகின்றனர். காலை 8 மணி வரை மீன்பிடித்து, அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.




இதன் மூலம் நாள்தோறும் 50 முதல் 200 கிலோ வரை மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். காவிரி ஆறு உற்பத்தியாவது முதல் கடந்து வரும் பாதைகளில் இயற்கையான முறையில் நன்னீர் மீன்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த மீன்கள் ஆற்று நீரோட்டத்தில் கடைமடை வரை நீந்தி செல்கின்றன. இயற்கையான முறையில் உற்பத்தியாகும் இந்த ஆற்று மீன்களை பிடித்து சமைத்து உண்பதில் அசைவ பிரியர்களிடம் விருப்பம் அதிகம்.


இதனால் ஏராளமான தொழிலாளர்கள் ஆங்காங்கே ஆற்று நீரில் நீந்தி வரும் மீன்களை பிடித்து விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கும்பகோணம் அருகே சாக்கோட்டை பகுதியில் உள்ள அரசலாற்றின் நீரொழுங்கி பகுதியில் ஏராளமான மீன்கள் சிக்குவதால் இங்கு மீன்பிடி தொழில் நடந்து வருகிறது என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.




இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ”ஆற்றில் இயற்கையான முறையில் உற்பத்தியாகி வளரும் மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. முன்பு ஆற்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் மணல் அள்ளப்பட்டு ஆங்காங்கே கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் மீன்களின் உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. எனவே அரசு கவனம் செலுத்தி ஆற்றில் மீன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதன் உள்ளூர் மீன் பிடி தொழிலாளர்கள் ஏராளமானோர் பயனடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று தெரிவித்தனர்.


இப்படி ஆற்றில் வளரும் மீன்களை பிடித்து கிடைக்கும் வருமானம் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உபயோகம் ஆகிறது. ஆனால் தற்போது மீன்களின் பெருக்கம் இல்லாததால் அதிகம் மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் இதை மட்டுமே நம்பி உள்ள இந்த மீனவர்கள் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.