பிள்ளையை போல் வளர்த்த தென்னை மரங்களை கண்களில் ஈரக்கசிவுடன் வெட்டி விட்டு மாற்றுத் தொழிலில் இறங்கி உள்ளார் தென்னை விவசாயி ஒருவர். இது தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்த வேதனை மிகுந்த சம்பவம்.
தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததால், வருவாய் இழப்பால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தனது இரண்டு ஏக்கரில் இருந்த 143 தென்னை மரங்களை மனதில் வலியோடும், கண்ணில் கண்ணீரோடும் வெட்டி அழித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக தென்னை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த கஜா புயலின் போது ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் இதை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எஞ்சிய மரங்களை காப்பாற்றிய விவசாயிகளுக்கு தற்போது தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து அடுத்த சூறாவளி புயல் போல் வெகுவாக பாதித்துள்ளது.
இதனால் தென்னை விவசாயமே வேண்டாம் என்று கைவிடும் அளவிற்கு வந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பந்துருந்தி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (57) என்பவர் தேங்காய் விலை வீழ்ச்சியால் பெரிதாக பாதிக்கப்பட்டார். இவருக்கு கண்டியூரில் சுமார் இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. பெற்ற பிள்ளைகளுக்கும் மேலாக தென்னம்பிள்ளைகளை வளர்த்து அவை உயர்ந்து நின்றதை கண்டு மனம் மகிழ்ந்தவர் இன்று தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால் தான் வளர்த்த 143 தென்னை மரங்களை வெட்டி அழித்து விட்டு மாற்று பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டார். இதற்காக தென்னை மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கண்களில் கண்ணீர் வழிய வெட்டுண்டு சாய்ந்த மரங்களை தடவி கொடுத்து வேதனையுடன் அவர் கூறியதாவது; விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் தேங்காயை குறைந்த விலைக்கு வாங்கி சென்று, வெளி சந்தையில் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ஆள் கூலி குறைந்தது 40 ரூபாயும், வெட்டி தேங்காயை அள்ள அரை நாள் சம்பளம் 300 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்பு தான் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதால், இனி இதனால் பலன் இல்லை என முடிவு செய்து மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். இருந்தாலும், அனைத்து மரங்களும் நன்றாக காய்க்க கூடிய மரங்கள். பிள்ளைகளை போல் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி மரக்கடைக்கு அனுப்புவது வேதனையாக தான் உள்ளது. மனதில் கோடாரி வெட்டு விழுந்தது போல் உணர்கிறேன். ஆனால் வேறு வழியின்றி இவற்றை வெட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்