தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா வாளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 40. இவர் நன்னிலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு நன்னிலத்தில் வசித்து வரும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி கோபால் அவரது மனைவி, மைத்துனர் குகன், குகனின் மனைவி கோமதி ஆகியோர் குடவாசல் தாலுகா எண்கன் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த தீபா, சங்கர் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் ஆகியோருக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி  வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி ஆனந்தன் 28 லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கி அந்தப் பணத்தை கோபால் மற்றும் நான்கு பேரிடம் ஆனந்தன் கொடுத்ததாகவும் அதனை பெற்றுக் கொண்டு அவர்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அடையாள அட்டை மற்றும் நியமன ஆணையை அனுப்பியதாகவும் கூறியுள்ளார். 




இந்த நியமன ஆணை மற்றும் அடையாள அட்டையை எடுத்துச் சென்று பாலிடெக்னிக் கல்லூரியில் கேட்டபோது இது போலியானது என்றும் மேற்படி கோபால் மற்றும் குகன் ஆகியோர் இதுபோன்று நிறைய பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்குவதாகவும் பாலிடெக்னிக் கல்லூரியில் கூறியுள்ளனர். இதனையடுத்து கோபாலிடம் பணத்தை திருப்பித் தருமாறு ஆனந்தன் அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார் அப்போது அவரை திட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆனந்தன் கடந்த 2021 ஆம் ஆண்டு நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 




இந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் எம்பி டாக்டர் கோபால் அவரது மனைவி மற்றும் மைத்துனர் குகன் அவரது மனைவி கோமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த நன்னிலம் காவல்துறையினர் கைது போன்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த மனு மீது உடன் நடவடிக்கை எடுக்குமாறு நன்னிலம் உரிமையியல் மனு கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் நீதிபதி காவல் நிலையத்திற்கு ஒரு உத்தரவு அனுப்பியுள்ளார். அதில் இந்த மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் நன்னிலம் காவல் துறை ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவல்துறையினர் வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த முன்னாள் அ.தி.மு.க எம்பி யின் மைத்துனர் குகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண